தேமுதிக - மநகூ இடையே சிண்டு முடியும் வேலையில் பத்திரிகைகள் ஈடுபட்டுள்ளன - விஜயகாந்த் காட்டம்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (15:16 IST)
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி இடையே சிண்டு முடியும் வேலையில் சில பத்திரிகைகள் ஈடுபட்டுள்ளன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
 
 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நேற்று திங்களன்று (11-04-16) மாலை தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசிய விஜயகாந்த், “மதுரையில் மேலவளவு, கீழவளவு பகுதி முழுவதையும் பிஆர்பி நிறுவனம் சுரண்டி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை கொள்ளையடித்துள்ளது. இந்தக் கொள்ளை இரு கழக ஆட்சிகளின் ஆசியோடு நடைபெற்றுள்ளது.
 
ஆனால் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அளித்த அறிக்கை மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? கிரானைட் ஊழலில் சிக்கிய பிஆர்பி நிறுவன அதிபர்களுக்கு எதிரான வழக்கை மாநில அரசு வலுவாக நடத்தவில்லை.
 
இதனால் அவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி மகேந்திர பூபதி தீர்ப்பு கூறினார். அவர் அளித்த தீர்ப்பு சரியில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்தார்கள். அப்படியிருக்கும்போது பிஆர்பி அதிபரை ஏன் கைது செய்யவில்லை?
 
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி இடையே சிண்டு முடியும் வேலையில் சில பத்திரிகைகள் ஈடுபட்டுள்ளன. எதை எதையோ எழுதுகிறார்கள் கருத்து கந்தசாமி என்பதுபோல் அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு நமது கூட்டணிக்கு கொள்கையில்லை என்று பேசுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் ஆண்ட கட்சிகளுக்கு என்ன கொள்கை இருந்தது என்பதை அவர்கள் கேட்பார்களா?
 
தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் சீரழித்து விட்டன. அந்தச் சீரழிவில் இருந்து மக்களைக் காப்பாற்ற தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா இணைந்துள்ளன. திமுக-அதிமுகவுக்கு எதிரான அந்த யுத்தத்தில் நாம்தான் வெற்றிபெறப் போகிறோம்“ என்று அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :