1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (10:59 IST)

சசிகலாவிடம் நாளை விசாரணை? - வருமான வரித்துறையினர் அதிரடி

சிறையில் உள்ள சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
சசிகலா குடும்பம் மற்றும் உறவினர் வீடுகள் என 215 இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அதில் ரூ.1500 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. மேலும், 200க்கும் மேற்பட்ட பினாமி பெயரிகளில் வாங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், தங்க மற்றும் வைர நகைகள் சிக்கியதாக கூறப்படுகிறது. 
 
மேலும், ஜெ. வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் இல்லத்திலும் வருமான வரித்துறையின் சோதனை நடத்தினர். அதில், சில பென் டிரைவவ், லேப்டாப் மற்றும் ஜெ.விற்கு வந்த கடிதங்கள் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், ஜெ.வின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றனின் உதவியுடன் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. சசிகலா தங்கியிருந்த அறையில் பல போலி நிறுவனங்கள் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், திரைமறைவில் நடந்த ஏராளமான முறைகேடுகள், பேரங்கள் பற்றிய தகவல்களும் சிக்கியதாக தெரிகிறது.   
 
மேலும், பணப் பரிவர்த்தனை தொடர்பு உள்ள முக்கிய கடிதங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆவணங்களை ஆய்வு செய்த பின் சசிகலா குடும்பத்தினரிடம் மீண்டும் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என செய்திகள் வெளியானது.
 
அந்நிலையில், உறவினர்கள் சொத்துக்கள் வாங்கி குவித்ததில் முக்கிய கருவியாக செயல்பட்டது சசிகலாதான் என்பதால் அவரிடம் விரைவில் விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நாளை பெங்களூர் சென்று சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்காக கர்நாடக சிறைத்துறையினரிடம் அனுமதி பெறும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.