இஸ்லாமிய மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி பக்ரீத் வாழ்த்து


K.N.Vadivel| Last Modified புதன், 23 செப்டம்பர் 2015 (23:13 IST)
இஸ்லாமிய மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இஸ்லாமிய சமுதாய மக்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்தி வரும் உணர்வோடு; பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உடன்பிறப்புகளின் குடும்பத்தார் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகி இன்பம் நிலவிட எனது இதயம்கனிந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்!
 
தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.
 
‘இஸ்லாம்’ என்பது ஒரு சமயம் அல்லது மதம் என்று கூறுவதைவிட, அது ஒரு ‘வாழ்க்கை நெறி’ என்றே கூறலாம் எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் எக்காலத்திலும், எந்நாளிலும் இஸ்லாமிய மக்களின்பால் பரிவு கொண்டுள்ள இயக்கமாகும்.
 
தந்தை பெரியாரின் அன்புக்கும், பேரறிஞர் அண்ணாவின் பாசத்திற்கும், எனது மட்டற்ற மதிப்புக்கும் உரியவராகத் திகழ்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 1972, ஏப்ரல் திங்களில் உடல்நலம் குன்றி கவலைக்கிடமான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார் எனும் செய்திகேட்டு, கோவை மாவட்ட சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, உடனே சென்னை திரும்பினேன்.
 
அப்போதே, மருத்துவமனை சென்று பார்த்த போது, அவர் கண்மூடி மயக்க நிலையில் படுத்திருந்தார். அவர் அருகே குனிந்து மெல்லிய குரலில் "அய்யா நான் கருணாநிதி வந்திருக்கிறேன்"என்று கூறினேன். அந்தக் குரல் கேட்டு கண் விழித்துப் பார்த்த அந்தப் பெருமகன் தம் கரங்களை நீட்டியபடி, மிகவும் பலகீனமான குரலில் "முஸ்லீம் சமுதாயத்திற்குத் தாங்கள் செய்த உதவிகளுக்கெல்லாம் எனது நன்றி" என்று கூறிய காட்சியை நினைந்து இன்றும் நெஞ்சம் நெகிழ்கிறேன்.
 
அதேவேளையில், இஸ்லாமிய மக்களுக்குக் கழக அரசு காலத்தில் மீலாது நபித் திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கியது, உருதுபேசும் முஸ்லீம்களுக்குப் பிற்படுத்தப் பட்டோருக்கான சலுகைகள் வழங்கியது, உதவித்தொகை பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2000 என்பதில் இருந்து 2400ஆக உயர்த்தியது திமுக ஆட்சியில் தான்.
 
அதே போல, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கியது, அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி அதிக அளவில் முஸ்லீம்கள் பயனடைய வழிவகுத்தது முதலான பல்வேறு சலுகைகளை யெல்லாம் வழங்கியதை தற்போது நினைவுகூர்ந்து பார்கிறேன்.
 
இஸ்லாமிய சமுதாய மக்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்தி வரும் உணர்வோடு; பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உடன்பிறப்புகளின் குடும்பத்தார் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகி இன்பம் நிலவிட எனது இதயம்கனிந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.  
 


இதில் மேலும் படிக்கவும் :