வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (18:57 IST)

தினகரன் அணியில் இருந்து திவாகரனுக்கு எதிர்ப்பு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நேற்று பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் சில சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கருத்துக்கு தினகரன் அணியை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் டிசம்பர் 4-ஆம் தேதியே மரணமடைந்துவிட்டார் என கடைசி வரை ஜெயலலிதா உடன் இருந்த அவரது தோழி சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று கூறினார்.
 
திவாகரனின் இந்த பேச்சு பல்வேறு சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கியது. இதனால் தமிழக அரசியலே பரபரப்பாக காணப்பட்டது. இதனையடுத்து திவாகரன் தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என விளக்கம் அளித்தார்.
 
இந்நிலையில் திவாகரன் கூறிய கருத்து குறித்து பேசியுள்ள தினகரன் அணியை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் முன்னுக்கு பின் முரணாக பேசி மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார். டிசம்பர் 5-ம் தேதி இறந்ததாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் எதற்காக தவறான தகவல்களை அவர் தெரிவிக்க வேண்டும் என்றார்.
 
மேலும் சசிகலா சிறையில் உள்ள நிலையில் துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் எங்களை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் தேவை இல்லாமல் திவாகரனோ, கிருஷ்ணப்பிரியாவோ தவறான தகவல்கள் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலில் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றார் தங்க தமிழ்ச்செல்வன்.