ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (13:59 IST)

வாங்கிய வீட்டை விற்க முடியாமல் திணறும் சென்னைவாசிகள்: பாஜக பிரமுகரின் அதிர்ச்சி தகவல்..

வாங்கிய வீட்டை விற்க முடியாமல் சென்னைவாசிகள் திணறி வருவதாக பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கடந்த வாரம் சென்னை, தாழம்பூர் 'காஸா கிராண்ட்' கட்டுமான நிறுவனம் கட்டியுள்ள குடியிருப்புக்கான உரிய ஆவணங்கள் மற்றும் பட்டா தங்களுக்கு கிடைக்கவில்லையென குடியிருப்பு சொந்தக்காரர்கள் அந்த நிறுவன அலுவலகத்தில் போராட்டம் செய்தது குறித்து நான் பதிவிட்டதையடுத்து பொது மக்களில் பலர் சென்னை உட்பட திருச்சி, மதுரை, கோவை என பல நகரங்களிலிருந்தும், தங்களின் குடியிருப்புகளும் அப்படிப்பட்ட சிக்கலில் தான் உள்ளது என்றும் பல கட்டட நிறுவனங்கள் இப்படி பல்வேறு வழக்குகளை நீதிமன்றங்களில் எதிர்கொண்டு வருகின்றன என்றும் தெரிவித்து வருகின்றனர்.
 
பலர் தங்களின் சொத்தை விற்க முடிவதில்லை என்றும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யமுடியாது என்று மறுக்கப்படுவதாகவும் வருத்தப்படுகிறார்கள். பல ஆயிரம் பேர், லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் முதலீடு செய்தும், தங்களது சேமிப்பை, உழைத்து ஈட்டிய வருமானம் வீணாகி விட்டதே என்ற கவலையை வெளிப்படுத்துவது நம் நெஞ்சை பிழிகிறது. இது முழுக்க முழுக்க கட்டுமான நிறுவனங்களின் தவறு தான் என்று சிலரும், இல்லை, இல்லை, அரசு துறைகளின் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் தான் இந்த மோசடிகளுக்கு காரணம் என்று பலரும், மக்களின் அறியாமை தான் காரணம் என்று சிலரும் வாதிட்டு வருகிறார்கள். அதே தாழம்பூர் பகுதியை சேர்ந்த வேறொரு அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்த ஒருவர் நேரில் என்னை சந்தித்து, "வெளிநாட்டில் பணிபுரியும் என் மகள் தாழம்பூரில் ஒரு மிக பெரிய கட்டுமான  நிறுவனத்தின் அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்கினார். சில ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அதை விற்கலாம் என்று முடிவு செய்து ஆவணங்களை பதிவு செய்ய சென்றால், இந்த சர்வே எண் அனாதீன நிலம் என்பதால் விற்க முடியாது, பதிவு செய்ய முடியாது என்கிறார்கள். நானும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்" என்று புலம்பி தீர்த்து விட்டார். சில ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்தது எப்படி என்று கேட்டால், நீதிமன்றத்தில் பார்த்து கொள்ளுங்கள் என்று பதில் வருகிறது என்கிறார்.
 
மேலும், சமீபத்திய வெள்ளத்திற்கு பின்னர் வாடகைக்கு குடி வர கூட யாரும் முன்வரவில்லை என்று சோகத்துடன் கூறியது, அரசு நிர்வாகத்தின் அவலத்தை உணர்த்தியது. அரும்பாடுபட்டு, உழைத்து சம்பாதித்து, சேமித்த பணத்தை முதலீடு செய்து, மேலும் கடன் வாங்கி, மாதாமாதம் வட்டியோடு திருப்பி செலுத்தி இன்று அதை விற்ககூட முடியாத சூழ்நிலையில் பல பேருக்கு மன அழுத்தம் வந்து விடுகிறது என்றால் மிகையாகாது. இந்த நிலைக்கு யார் காரணம் என்று நாம் அலசி ஆராய்ந்து பார்க்கும் போது, நெஞ்சம் வெடிக்கும் அளவிற்கு ஒட்டுமொத்த சமுதாயமே லஞ்சம், ஊழல், மோசடி, முறைகேடு, பேராசை என ஊறித்திளைத்திருப்பது நமது ஒட்டு மொத்த கட்டமைப்பின் ஒழுக்கத்தை, நம்பிக்கையை, நேர்மையை  கேள்விக்குறியாக்குகிறது. 
 
உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகம், மாநில அரசு, கட்டுமான நிறுவனம், கடன் கொடுக்கும் வங்கிகள் என ஒட்டுமொத்த அமைப்பே ஒரு தனி மனிதனின் உழைப்பை சுரண்டுவதில், ஏமாற்றுவதில் முனைப்போடு செயல்பட்டு கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி, நீதி மன்றங்கள் தன் பங்குக்கு நீண்ட காலம் விசாரணை செய்து, காலம் கடந்து தீர்ப்பளித்து, தீர்வை எட்டும் முன் பாதிப்புக்குள்ளன நபர்கள் நிதிச் சுமையினால் நொடிந்து பொய், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு நம் ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கையிழந்து வெறுப்பின் உச்சத்திற்கும், விரக்திக்கும் சென்று விடுவது தவிர்க்க இயலாத கொடுமை.
 
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நிறுவனங்கள், நீதித்துறை என எல்லோராலும் பந்தாடப்படும் லட்சக்கணக்கானோரின் இன்னல்களுக்கு தீர்வு கிடைக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரை இது ஒரு தொடர் கதை.
 
 
 
Edited by Siva