காட்டுக்குள் வந்தால் சுட்டுக்கொல்வோம்: ஆந்திர அமைச்சரின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்

Suresh| Last Updated: திங்கள், 13 ஏப்ரல் 2015 (15:36 IST)
காட்டுக்குள் வந்தால் சுட்டுக்கொல்வோம் என்று கூறிய ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ண ரெட்டியின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ண ரெட்டி கருத்து கூறுகையில், "சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் கடத்தல்காரர்கள் தான். இதை தமிழர், தெலுங்கர் என்று ஒப்பிட்டு பேசக்கூடாது.

நாங்களும் தமிழ்நாட்டில் இருந்துதான் வந்தோம். சித்தூரில் இருந்து சென்னைக்கு 100 கிலோ மீட்டர்தான். கோடிக் கணக்கான மதிப்புடைய மரங்களை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. சுற்றுலா பயணிகளாக வந்தால் ஏற்கலாம். வனவிலங்குகளை வேட்டையாட வந்தாலும் அவர்கள் வேட்டையாடப்படுவார்கள்" என்று கூறினார்.
அவரது இந்த பேச்சு தமிழர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:–

யாராக இருந்தாலும் தவறு செய்தால் கைது செய்து நீதிமன்றத்தின்முன் நிறுத்தி விசாரித்து நீதிமன்றம்தான் தண்டனை வழங்கும். ஒருவருடைய குற்றத்தை நிரூபிக்கும்வரை அவர் நிரபராதிதான். ஆந்திராவில் நடத்தி இருப்பது போலி என் கவுண்டர். இவ்வாறு போலி என்கவுண்டர் மூலம் அப்பாவிகளின் உயிரை பறிக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை.
ஆந்திர அமைச்சரின் கருத்து மனிதாபிமானமற்ற, சட்டத்துக்கு விரோதமான கருத்து. இதை வன்மையாக கண்டிக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக
தலைவர் இளங்கோவன் கூறியிருப்பதாவது:–

ஆந்திர வனப்பகுதிக்குள் வந்தால் சுட்டுக்கொல்வோம் என்று அந்த மாநில மந்திரி ஆணவத்தோடு பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. யார் என்ன குற்றம் செய்தாலும் சட்டத்தின் படிதான் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தை காலில் போட்டு மிதித்து அராஜக வழியில் கொலை செய்ய முடியாது. கொலை செய்யும் உரிமை போலீசுக்கும் இல்லை. குற்றவாளியை தண்டிக்க சட்டம் இருக்கிறது. நீதிமன்றம் இருக்கிறது.
அப்பாவி தமிழர்களை பச்சைப் படுகொலை செய்த கொலை குற்றவாளிகளான காவல்துறையினரை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆந்திர உயர் நீதிமன்றமே கூறி இருக்கிறது.

நீதிமன்ற கருத்துக்கு மாறாக அமைச்சர் பேசி இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
பஜகவின் தமிழக தலைவர் தமிழிசை
சவுந்தர்ராஜன் கூறியிருப்பதாவது:–

ஆந்திர அமைச்சர் சொல்வது போல் படுகொலை செய்யப்பட்டவர்கள் கடத்தல்காரர்கள் அல்ல. பெயின்டிங் வேலை, விவசாயம் செய்பவர்கள். மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். அவர்களின் ஏழ்மையை கடத்தல்காரர்களின் ஏஜெண்டுகள் பயன்படுத்தி கமிஷன் பெற்று கொள்கிறார்கள்.
பண ஆசைகாட்டி கூலித் தொழிலாளர்களை பலியாக்கி உண்மையான கடத்தல்காரர்களை பாதுகாக்கிறார்கள். ஆந்திர அமைச்சர் கூறுவது போல் இவர்கள் எல்லாம் கோடிக்கணக்கான விலை உள்ள சொகுசு காரில் வருபவர்கள் அல்ல. அன்றாடங் காய்ச்சிகள். இப்படி ஒரு அப்பட்டமான பொய்யை, ஆணவத்துடன் ஆந்திர அமைச்சர் பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :