வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 7 நவம்பர் 2015 (10:50 IST)

20 குழந்தைகள் இருந்த அங்கன்வாடி மையத்தில் புகுந்த 2 பாம்புகள்

சேலையூர் அங்கன்வாடி மையத்தில் எலியை வேட்டையாடுவதற்காக வந்த 2 பாம்புகள் சண்டையிட்டதைப் பார்த்த அங்கன்வாடி பெண் ஊழியர், அங்கிருந்த 20 குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார்.


 

 
தாம்பரம் நகராட்சி சேலையூர் 18 ஆவது வார்டில் திருப்பூர் குமரன் பூங்கா உள்ளது. இந்த பூங்கா சீரமைக்கப்பட்டு திறக்கப்படாத நிலையில் உள்ளது.
 
இந்த பூங்காவின் உள்ளேயே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 முதல் 5 வயது வரையிலான 20 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. அங்கன்வாடி மைய ஊழியரான விசாலாட்சி, சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார்.
 
அப்போது, அங்கன்வாடி மைய உள் அறையை அவர் திறந்தார். அங்கு 2 பாம்புகள் ஒரு எலியை வேட்டையாட சண்டை போட்டுக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 
இதைத் தொடர்ந்து, சமயோச்சிதமாக செயல்பட்ட அவர், அந்த அறையின் கதவை பூட்டினார். அங்கிருந்த 20 குழந்தைகளையும் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தார். அதன்பிறகு அங்கன்வாடி மையத்துக்குள் பாம்புகள் புகுந்து விட்டதாக கூச்சலிட்டார்.
 
இந்த சத்தம் கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். பின்னர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அங்கன்வாடி மையத்துக்குள் சென்று பாம்புகளை தேடினார்.  பின்னர் தண்ணீர் குழாயைத் திறந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தார்.
 
இந்நிலையில், அங்கிருந்த ஒரு துளைக்குள் இருந்து சாரை பாம்பு ஒன்று வெளியே வந்தது. அந்த பாம்பை அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் கல்லால் அடித்துக்கொன்றனர்.
 
அப்போது இதையறிந்து அங்கு வந்த குழந்தைகளின் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக அங்கன்வாடி மைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.