சோதனை மேல் சோதனை பாடினது போதும் எங்களுக்கு ஓட்டு போடுங்க - விஜயகாந்த்

Last Updated: சனி, 29 மார்ச் 2014 (13:36 IST)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி, என்ற பாடலுக்கு ஏற்ப பல சோதனைகளைச் சந்தித்து கொண்டிருக்கும் நீங்கள் திமுக, அதிமுக என மாறி, மாறி ஓட்டளித்தது போதும். இந்த முறை உங்களது ஓட்டுகளை எங்கள் கூட்டணிக்கு அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரித்தார்.
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஜெ.ரவீந்திரனுக்கு ஆதரவாக தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் சென்னை அண்ணா நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவர் கூறியது:
 
சென்னை மாநகரில் கொசுக்கள் அதிகமாக உள்ளன. அதற்கு அதிமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
நான் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறேன். எல்லா பகுதிகளிலும் உள்ள சாலைகளை சரியாக போடாமல், ஒட்டு போடும் வேலைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இதனால் குண்டும், குழியுமான சாலைகளில் வாகனங்கள் தள்ளாடியபடியே செல்கின்றன. ஆனால் சென்னையில் ஆளுங்கட்சித் தலைவர் செல்லும் பாதைகளில் சாதாரண சாலை வேகத்தடைகளை கூட அகற்றி அவர்கள் மட்டும் குலுங்காமல் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஓட்டு போட்ட மக்கள் மட்டும் குலுங்கி, குலுங்கி செல்ல வேண்டும். இது என்ன நியாயம்?
 
பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், சென்னை நகரில் உள்ள மக்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக இருந்திருக்கும். ஆனால் அந்தத் திட்டம் என்ன நிலையில் உள்ளது என்பதே தெரியவில்லை. குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கட்டடங்கள் இடிந்து விடும் நிலையில் உள்ளன. அதனைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
மத்திய சென்னை தொகுதியில் ஏற்கெனவே வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இது வரை தொகுதி பக்கமே எட்டிப் பார்த்ததில்லை.
 
தமிழ்நாடு மின்சாரத் துறை "மின் கம்பிகள் வழியே 500 வாட் மின்சாரம் சென்றால் 350 வாட் மின்சாரம் தான் கிடைக்கிறது. இதற்கு மின்சாரம் செல்லும் வழிகள்தான் காரணம் என்று கூறுகிறது.
 
இந்த மின் இழப்புக்கு சுதந்திரம் அடைவதற்கு முன் போட்ட பழைய மின் கம்பிகள் தான் காரணம். மின்சார பற்றாக்குறையினால் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சிறு, குறு தொழில்களை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மின்சார பற்றாக்குறையினால் வேலை இழந்துள்ளனர்.    
 
மின் இழப்புக்கு காரணமான சுதந்திரம் அடைவதற்கு முன் போடப்பட்ட பழைய மின் கம்பிகளை மாற்ற அதிமுக, திமுக என எந்த ஒரு அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.
 
"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி ' என்ற பாடலுக்கு ஏற்ப பல சோதனைகளைச் சந்தித்து கொண்டிருக்கும் நீங்கள் திமுக, அதிமுக என மாறி, மாறி ஓட்டளித்தது போதும். இந்த முறை உங்களது ஓட்டுகளை எங்கள் கூட்டணிக்கு அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நாங்கள் வெற்றி பெற்றால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றார் விஜயகாந்த்.


இதில் மேலும் படிக்கவும் :