கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே நாட்டினை காப்பாற்ற முடியும் - தா.பாண்டியன்

Ilavarasan| Last Modified புதன், 7 மே 2014 (15:08 IST)
காங்கிரஸ், பாஜக இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே நாட்டினை காப்பாற்ற முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மே தினம், கார்ல்மார்க்ஸ் பிறந்த தினம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகள் வாட்டாக்குடி இரணியன், ஜாம்புவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோரின் நினைவு தின விழா நடைபெற்றது.

விழாவிற்கு அதன் மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமை தாங்கினார், ஒன்றிய செயலாளர் மார்கஸ் வரவேற்றார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் அரங்க சின்னப்பா, பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பாண்டியன் சிறப்புரையாற்றினார். விழாவில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

தேர்தலில் ராகுலோ கூகுளோ, மோடியோ யார் வென்றாலும் அமெரிக்க டாலரின் மீதான மதிப்பு மாறப்போவது இல்லை. சீனாவை கண்டு இந்திய முதலாளிகள் பயப்படுகின்றனர். இன்று அவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு பாடி ஆடும் பிள்ளையார் வரை குறைந்த விலையில் தயாரிக்க தொடங்கிவிட்டனர். இன்னும் சொல்லப் போனால் இந்திய முதலாளிகள் பலர் சீனாவில் தொழில் நிறுவனம் தொடங்கிவிட்டனர். காரணம் சீனாவில் ஏற்றுமதி சிக்கல் இல்லை. இந்தியாவில் எல்லாவற்றிற்கும் லஞ்சம் லஞ்சம் என கொடுத்தும் போராட வேண்டி இருக்கிறது.
நாளை மோடி ஆட்சி அமைந்தாலும் ஊழலை ஒழிப்பார்களா? மோடியின் அமைச்சர் அவையில் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். நாட்டின் ஊழல் வாதிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் எல்லோரையும் தங்கள் கட்சியில் சேர்க்கும் இவர்களா? ஊழலை ஒழிக்க போகிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரசும் ஒன்றும் செய்யவில்லை. முதலில் அனைவரிடமும் பேரம் பேசி எதுவும் படியாததால் கடைசியில் அவர்களை பற்றி விமர்சிக்க தொடங்கினர். இவர்கள் இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே நாட்டினை காப்பாற்ற முடியும் என்று தா.பாண்டியன் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :