ஆறடி கிடங்குக்குள் இருந்து ஓர் குரல்...


கவிமகன்| Last Modified திங்கள், 21 மார்ச் 2016 (18:04 IST)
என் குரல் ஓய்ந்து போனதா?
ஓய வைக்கப்பட்டதா?
முடக்கப் பட்டு மண்ணுக்குள் 
மூடப்பட்டதா?

 
 
புயல் புகுந்து சுழன்ற மண்ணின்
பூ என்றுதானே சொன்னார்கள்
இன்று புயலடித்து தின்ற 
வாடிய மலரிதழாய்
கூடு விட்டு வெளியில் வர
முடியாது செத்து கிடக்கிறது
காரணம் தெரியவில்லை
அருகில் நின்றவரை கேட்கிறேன்
திரும்பி கூட பார்க்காது போகிறான்
நான் பார்ப்போரை கேட்டு கேட்டு
களைத்து என் தங்ககம் செல்கிறேன்.
 
 
தேடி தேடி செத்துப் போன மனம்
தோற்றுப் போய் கிடக்கிறது.
 
என் குரல் துடிப்பற்று கிடப்பது ஏன்?
நான் கேட்பது உங்களுக்கு
கேட்கவில்லையா பிச்சையாய்
உங்கள் பதிலிடுங்கள்.
 
நோக்கம்
அறிந்து விட துடிக்கும்
இதயத்தை அடக்க
ஆசை கொள்கிறேன்
முடியவில்லை எனக்கேன்
இந்த நிலை ?
பணமா? என் குணமா?
பிறர் திணை வாழ
நான் கொண்ட திண்ணமா?
 
 
மாறி மாறி வினாக்கள்
எழுந்து மறைகின்றன
தினமும் என் குரலுக்கான
பயணத்தில் மனதுக்கும்
எண்ணங்களுக்கும்
இடையே விடை அறிய
துடிக்கும் பூகம்பம்,
எழுந்து துடித்து
அடங்கி பெறும் நிலை
பூச்சியமாகும் போதும்
மறுபடியும் மனசு
எண்ணத் துவங்கும்
யாரோ அருகில் இருந்த
கிடங்கில் முனகுவது கேட்கிறது
ஓ.. நான் மரணித்து விட்டேனா?
என் உடலை தொட முனைகிறேன்
முடியவில்லை...
இப்போது தான் புரிகிறது
வல்லாதிக்க பாதங்களிடையே
நசுக்கப்பட்டு சாகடிக்கப்பட்டேன்.
 
 
என் வசந்த காலங்கள்
என நினைத்த என்
தினங்கள் என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
தின்று தீர்த்த போது
என் சுமாரகம் அற்று
இருந்தது இந்த பூமி
இப்போது என் குரலை
சொல்லி சலசலக்கிறது
நான் தான் மரணிக்க வைக்கப்பட்டேனே
எதுக்கு இந்த சலசலப்பு?
 
 
நாதிகளுக்காய் நிமிர்ந்து
நின்ற என் குரல்
உயர்ந்து நின்ற போது
அஞ்சிய ஜெகமே இன்று
என்னை ஏன் அஞ்ச வைக்கிறாய்?
ஓங்கி கத்த எண்ணம் வந்தாலும்
என் குரல் மண் துணிக்கைகளுக்கு
கூட கேட்காத கனவாகவே
கிடக்கிறது
 
 
ஊடக புழுக்கள் தின்று
கொண்டிருக்கும் என் உடலில்
வழியும் இரத்த துளிகள்
மண்ணோடு மரித்து போகிறதே...
 
அத்தனையையும் தெரிந்து
என் செவிகளும் கண்களும்
தங்கள் உணரிகளால்
உணர மறுத்தன
 
அப்போதும் என் குரல் 
மௌனித்தே கிடந்தது
எட்டுத்திக்கும் கட்டுக்கடங்காது
பாய்ந்த புது வெள்ளமான
என் குரல்
அடக்கப்பட்டது ஏன்?
 
 
வாய் திறக்க முடியாது
ஆறடி நிலத்திற்குள்
நான் தூங்க முயல்கிறேன்
விழிகள் நிரந்தரமாய்
மூடியும் தூக்கம் வர 
மறுத்து அடம்பிடிக்கின்றன.
 
 
எனக்கு இனி வைகறை இல்லை
இருள் மட்டுமே என்
விழிகளுக்கு கிடைக்கும்
வெளிச்சம்
இப்போதெல்லாம் நான்
வெளிச்சமற்ற வெளிச்சத்துக்குள்
வாழ கற்று கொண்டுவிட்டேன்
முதிரன் தினமும்
என் குரலை 
புணர்ந்து கொள்கின்றான்...
 
அனுகன் என்று வந்தவன்
என் குரலை
ரசித்து உண்கிறான்
பலர் என் விருப்பற்று
தங்கள் ஆண்மைகளை
விலைபேசி குரலை தின்கிறார்.
 
 
பெண்ணியவாதிகள் கூட
பெண் என மறந்து என்னை
கதறியழ வைக்கிறார்.
என் குரலாய் பல குரல்கள்
முளைத்து வானவெளியில்
புதுப்பயணம் தொடர்கின்றன
இது என் குரலா? என் மனதின்
வரிகளால் எழுந்த குரலா?
என் பெயர் சொல்லு நிமிரும்
ஆதிக்க வெறிக்குரலா?
நினைவில்லை.
 
இதை என்னை வஞ்சித்து தினமும்
தின்று தீர்க்கும் இந்த உலகே
தீர்மானி்க்கட்டும்
முடிவு தெரியாது
நான் வெளிவர முடியா
மண் சிறைக்குள் மல்லார்ந்து
கிடக்கிறேன்.
 
 
கூரிய வாளால் என் குரலை
கீறிக் கொள்கிறது இவ்வுலகு
என் உடலை மறைத்து
கிடக்கும் பருத்தி துணியின்
மேலே நிர்வாண வர்ணம்
பூசி அழகு பார்க்கிறது என் இனம்
 
நானோ என் மானம்
காக்கும் உடையின் மறைப்பில்
மரணித்து கிடக்கிறேன்
என் குரலும் 
விபச்சாரியாக்கப்பட்டு 
விட்டதோ?
 
எழுந்த வினா முடிய முன்னே
மறு வினா துளிர்த்தது,
பெற்று வளர்த்த தாயை,
பெற்ற பிள்ளையை
இன்னொருத்தனுக்கு கூட்டி குடுக்கும்
துணிவு பெற்று
வளைந்து கொடுக்கிறதோ
பல சமயங்கள் மௌனம்
சில நிமிடங்கள் குமுறல்
தினமும் களைத்து போகும் வரை
என் குரல் தனித்து குமுறுகிறது
மண் துணிக்கைகள் மூடி
கிடக்கும் ஆறடி கிடங்குக்குள்ளே...
 
 
 
-கவிமகன்


இதில் மேலும் படிக்கவும் :