ஈரோடு மாவட்டத்தில் போதிய மழையில்லாத காரணத்தால் வனப்பகுதி வறட்சியை நோக்கி செல்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பர்கூர், கடம்பூர், தாளவாடி, பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகள் பதினாறாயிரம் சதுர கி.மீ. பரப்பளவை கொண்டதாகும். இந்த வனப்பகுதி மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். இதில் புலி,சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட அனைத்து தரப்பு வனவிலங்குகளும் வசித்து வருகிறது.
இந்த வனப்பகுதியில் பருவமழை சரியாக பெய்து வந்ததால் இந்த வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் சுகமாக வாழ்ந்து வந்தது.
வனப்பகுதியும் பசுமையாக செழிப்பாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் போதிய மழை பெய்யாத காரணத்தால் வனப்பகுதி வறட்சியை நோக்கி சென்றுகொண்டுள்ளது. இதனால் கடம்பூர் வனப்பகுதியில் அவ்வப்போது தீ பற்றி வனப்பகுதி எரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
வனவிலங்குகள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறது. குறிப்பாக யானைகள் தண்ணீர் மற்றும் உணவு பிரச்சனையால் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் வனப்பகுதியில் இருக்கும் குளம், குட்டைகளில் தண்ணீர் வற்றிவிட்டது.
வனப்பகுதியில் உள்ள மரங்கள் வறண்டு வனப்பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் செடி, கொடிகள் இல்லாமல் வெறும் மண்திட்டுகளாக காட்சியளிக்கிறது. வருணபகவான் கண் திறந்து மீண்டும் வனப்பகுதி வளம் பெறவேண்டும் என்பதே வன ஆர்வாலர்களின் எதிர்பார்ப்பாகும்.