சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.109 கோடியில் மேம்பாலம், சுரங்கப் பாதை
வெள்ளி, 22 ஜூன் 2012( 12:58 IST )
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.109 கோடி செலவில் மேம்பாலம், சுரங்க நடைபாதைகள், ஆகாய நடைபாதை ஆகியவற்றை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை, ஜவஹர்லால் நேரு சாலையில், காளியம்மன் கோயில் தெரு மற்றும் சென்னை புறநகர் பேருந்து நுழைவு வாயில் சந்திப்பில் 40 கோடி ரூபாய் செலவில் ஒரு மேம்பாலம், பெரியார் ஈ.வெ.ரா சாலையில், அமைந்தகரை அருகில் கூவம் ஆற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் செலவில் கூடுதல் மூன்று வழித்தடப் பாலம், மவுண்ட் - பூந்தமல்லி ஆவடி சாலையில் 5 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக இரண்டு வழித்தடப் பாலம், மவுண்ட்-பூந்தமல்லி ஆவடி சாலையில் 1 கோடி ரூபாய் செலவில் பாலத்தை அகலப்படுத்துதல்,
சிங்கப்பெருமாள் கோயில் - ஸ்ரீபெரும்புதூர் -திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் 2 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக இரண்டு வழித்தடப் பாலம், காரனோடை, மீஞ்சூர் சாலையில் 9 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம், தாம்பரம் - முடிச்சூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் 2 கோடி ரூபாய் செலவில் மூழ்கு பாலம், சென்னை கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் 2 கோடி ரூபாய் செலவில் மூழ்கு பாலம், சென்னை கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் 1 கோடி ரூபாய் செலவில் மூழ்கு பாலம் என 8 இடங்களில் 30 கோடி ரூபாய் செலவில் பாலங்கள் அமைக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அண்ணா சாலையில் சின்னமலை அருகில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சுரங்க நடைபாதை, கிண்டி எம்.கே.என். சாலை சந்திப்பு அருகில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சுரங்க நடைபாதை, ஈக்காடுதாங்கல், மல்லாடி நிறுவனம் அருகில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சுரங்க நடைபாதை, காசி திரை அரங்கம் அருகில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சுரங்க நடைபாதை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அருகில் 5 கோடி ரூபாய் செலவில் சுரங்க நடைபாதை என மொத்தம் 19 கோடி ரூபாய் செலவில் 5 சுரங்க நடைபாதைகள் அமைக்கவும்,
ஈ.வெ.ரா. சாலையில் உள்ள சென்ட்ரல், பூங்கா மற்றும் பொது மருத்துவமனை பகுதிகளை இணைத்து 20 கோடி ரூபாய் செலவில் ஆகாய நடைபாதை அமைக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு 109 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம், பாலங்கள், சுரங்க நடைபாதைகள், ஆகாய நடைபாதை ஆகியவற்றை அமைக்க உத்தரவிட்டுள்ளதன் மூலம், போக்குவரத்து நெரிசல் குறையவும், குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.