கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு தமிழ்நாட்டின் இசைவை பெறாமல் புதிய அணையை கட்ட இயலாது என்றும் அவ்வாறு கர்நாடக அரசு முயற்சிக்குமேயானால் தமிழகம் அதனை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று இது குறித்து கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அவர் பேசுகையில், இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்கள் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கு பெறப்பட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி பேசியுள்ளார்கள். காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது. இந்த இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் பிரசுரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு உடனே பிரசுரிக்கப்பட்டு இருந்தால், இந்த இறுதி ஆணை செயல்வடிவம் பெற்றிருக்கும்.
ஆனால், காவிரி தாவாவில் தொடர்புடைய அனைத்து மாநிலங்கள், அதாவது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆகிய மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு இது தொடர்பாக விளக்கங்கள் கேட்டு காவிரி நடுவர் மன்றத்தை அணுகின. இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மேல்முறையீட்டு மனு வில் மத்திய அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், 2011 ஆம் ஆண்டு மே மாதம் நான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, 14.6.2011 அன்று பிரதமரை டெல்லியில் சந்தித்தபோது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடுவது; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு அறிவுரை வழங்குமாறு 17.10.2011 அன்று நான் பிரதமருக்கு மீண்டும் கடிதம் மூலம் வலியுறுத்தினேன். ஆனால், இக்கோரிக்கை மத்திய அரசால் இது நாள் வரை நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து, தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் வரை, அதன் 25.6.1991 நாளிட்ட இடைக்கால ஆணை அமலில் இருக்கும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. 16.10.2008 அன்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழுவின் 23-வது கூட்டத்தில் அதன் தலைவரும் இதே கருத்தை உறுதி செய்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள இடைக்கால ஆணையின்படி, நீரை விடுவிப்பதற்கான பாசன ஆண்டு என்பது ஜுன் மாதம் முதல் அடுத்த ஆண்டின் மே மாதம் வரை ஆகும். இம்முறையே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையிலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், நடுவர்மன்ற இறுதி ஆணையில் பாசன காலம் என்பது "ஜுன் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் நாள் வரை'' என குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி நதிநீர்த் தாவா வினை காவிரி நடுவர் மன்றம் முடிவுக்குக் கொண்டு வந்த நிலையில், அதன் 25.6.1991-ம் நாளிட்ட இடைக்கால ஆணை காலாவதி ஆகிவிட்டது என்றும், நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை இன்னமும் நடைமுறைக்கு வராத நிலையில், இடர்ப்பாடு காலத்தில் நீரைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் கர்நாட காவில் பாசனம் மேற் கொள்ளுதல் உள்ளடக்கிய அனைத்து அம்சங்களுக்கும் இந்த இறுதி ஆணை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருக்கும் என கர்நாடக அரசு கருத்து தெரிவித்து வருகிறது.
கர்நாடக அரசு இக்கருத்தை கூறிய போதிலும் நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணைப்படியோ அல்லது இறுதி ஆணைப்படியோ தமிழ்நாட்டுக்கு நீர் வழங்குவதில்லை. கர்நாடக அரசு தன்னுடைய நீர்த்தேக்கங்களில் எல்லா நீர்வரத்தையும் தேக்கி உபரி நீரை மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கி வருகிறது.