ஆட்சியில் பங்கு பெறாதது தவறுதான்: பீட்டர் அல்போன்ஸ்
சென்னை, புதன், 25 நவம்பர் 2009( 11:00 IST )
''தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு பெறாமல் போனது தவறுதான்'' என்று கூறியுள்ள சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ், இப்போது ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலைதான் மீதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் மறைந்த இந்திரா காந்தி பிறந்த தினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடைபெற்ற பேச்சாளர்கள் பயிற்சி முகாமை தொடங்கி துவக்கி வைத்து பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், காங்கிரஸ் கட்சியைவிட வேறு எந்த கட்சியும் நாட்டிற்கு சேவை செய்திடவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, ஆலய பிரவேசம், எழுத்துரிமை, பேச்சுரிமைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்.
40 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் 18 லட்சம் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை நம்மால் சேர்க்க முடிந்துள்ளது. காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது என்பதை இதன்மூலம் அறிய முடியும்.
மற்ற மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முடிந்த காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியாததற்கு தொண்டர்கள் காரணமல்ல. கட்சியின் தலைவர்கள்தான் காரணம்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை ஏன் ஏற்படுத்தவில்லை என குறித்து தொண்டர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நான் இது குறித்து பல முறை நம் தலைவர்களிடம் பேசி உள்ளேன்.
ஒரு கட்டத்தில் எனக்கு மந்திரி பதவி தேவை இல்லை. ஆனால் காங்கிரஸ் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனாலும் பயனில்லை. இது போன்ற சூழல் அடுத்த முறை அமையுமா என தெரியவில்லை.
இன்னும் ஓராண்டுதான் பதவி காலம் உள்ள நிலையில் ஆட்சியில் பங்கேற்று என்ன செய்யப்போகிறோம்?. இப்போது ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலைதான் மீதம் இருக்கும் என்று பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.