தமிழகம், கேரளா சமாதானப் போக்கை கடைபிடிக்க கோரி சரத்குமார் நடைப்பயணம்
சென்னை, புதன், 25 நவம்பர் 2009( 09:04 IST )
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களும் சமாதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கும் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இப்போது இந்தப் பிரச்சனை திசைமாறி உள்ளது. புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளமும், இப்போதைய அணை நல்ல உறுதியோடு இருக்கிறது என தமிழகமும் கூறி வருகின்றன.
முல்லைப் பெரியாறு பிரச்சனையை அரசியல் நோக்கத்தோடு அணுகாமல், நல்ல தீர்வு ஏற்பட அனைவரும் ஒற்றுமையோடு முயற்சிக்க வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரை மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்கள் விவசாயம், குடிநீருக்காக முல்லைப் பெரியார் நீர்த் தேக்கத்தையே நம்பி இருக்கிறார்கள். தண்ணீர் வராவிட்டால், இந்த 5 மாவட்டங்களும் வறட்சிக் காடாக மாறிவிடும்.
இப்போதுள்ள ஒப்பந்தம், இரு மாநில மக்களின் நன்மை கருதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய ஒப்பந்தங்கள் உருவாக வேண்டுமானால், நடைமுறை சிக்கல்கள் மேலும் அதிகமாகும்.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் சமாதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். அமைச்சர்கள், அதிகாரிகள், நிபுணர்கள், விவசாயிகள் அடங்கிய பேச்சுவார்த்தை குழு மூலம், சுமுகமாகப் பேசி தீர்வு காண முயல வேண்டும்.
இதனை வலியுறுத்தியும், இப்பிரச்சனையின் உண்மை நிலையை மக்களுக்கு விளக்கிடும் வகையிலும் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெறும்.
டிசம்பர் 19ஆம் தேதி தேனியில் தொடங்கி, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், க.புதுப்பட்டி, கம்பம், கூடலூர் வழியாக செல்லும் நடைபயணம், டிசம்பர் 20ஆம் தேதி லோயர்கேம்பில் நிறைவு பெறும் என சரத்குமார் கூறியுள்ளார்.