இடைத்தேர்தல்: கம்யூனிஸ்டு கட்சிகள் 25ஆம் தேதி முடிவு
சென்னை, திங்கள், 23 நவம்பர் 2009( 08:53 IST )
திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 25ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் அறிவித்துள்ளன.
திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், தேசியக்குழு உறுப்பினர் ஏ.எம்.கோபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன், செயற்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராஜன், பி.சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன், மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து வரும் 7ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்துகிறது. இதனை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
இரு தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை. 25ஆம் தேதி எங்கள் மாநில குழு கூட்டம் மதுரையில் நடக்கிறது. இதில் இதுபற்றி விரிவாக விவாதிப்போம். அதன் அடிப்படையில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தொடர்ந்து பேசி இறுதி முடிவை விரைவில் எடுப்போம் என்றார் வரதராஜன்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், இடைத்தேர்தலில் முறைகேடு நடக்கிறது என்றால் அதனை குற்றம்சாற்றுவதோடு ஒதுங்கிக்கொள்ளாமல், அதை கண்டித்து மக்களை திரட்டும் வகையில் கடந்த இடைத்தேர்தலில் களம் இறங்கினோம். ஆனால் இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த இடைத்தேர்தலுக்கும், இந்த இடைத்தேர்தலுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது. எங்களது நிலை குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. தொடர்ந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்போம். எங்கள் ஆதரவை யாரும் இதுவரை கேட்கவில்லை. கேட்டால் அவர்களுக்கு பதில் தருவோம் என்றார் தா.பாண்டியன்.