திருச்செந்தூர் , வந்தவாசி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி
சென்னை , ஞாயிறு, 22 நவம்பர் 2009( 17:41 IST )
வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் திருச்செந்தூர், வந்தவாசி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் திமுக, அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி ஏற்படுவது உறுதியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வென்ற முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,திமுகவில் சேர்ந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதேப்போன்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல் ஏ எம்.ஜெயராமன் திடீரென மரணமடைந்தால் இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளன.
இந்நிலையில், காலியாக உள்ள இந்த இரண்டு தொகுதிகளிலும் அடுத்த மாதம் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.
இந்நிலையில், இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வருகிற 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு விடுத்துள்ளார்.
அதேபோன்று அண்மையில் நடந்த ஐந்து தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக, இந்த தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவும் களத்தில் குதிக்கிறது.இதனால் மும்முனை போட்டி ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது.இதன் காரணமாக இந்த இடைத்தேர்தல் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பாமக, இடதுசாரி கட்சிகள் மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் இடைத்தேர்தல் குறித்த தங்களது நிலையை இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.