தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » முல்லைப் பெரியாறு அணை : மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
Feedback Print Bookmark and Share
 
முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் 18-வது பிளாக் பகுதியில் தண்ணீர் கசிகிறது என்று கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் கூறியதாக செய்தி வெளியானது.இதையடுத்து அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்வதற்காக தலைமைப் பொறியாளர்களைக் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது.

இதுகுறித்து மத்திய அரசின் நீர்வள ஆதார அமைச்சகத்தின் செயலாளருக்கு தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.ராமசுந்தரம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முல்லைப் பெரியாறு அணையில் நீர்கசிவு இருக்கிறது என்று கேரள அரசு கூறியதாக சமீபத்தில் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.இதையடுத்து அணையை ஆய்வு செய்து அதன் உறுதித் தன்மையை கண்டறிந்து தெரிவிப்பதற்காக அணை பாதுகாப்பு இயக்ககத்தின் தலைமை பொறியாளர்கள் மற்றும் பொறியாளர்களை கடந்த 17 மற்றும் 20 ஆம் தேதிகளில் தமிழக அரசு அனுப்பியது.

அந்த குழுவினர் அணையின் சுவர்களுக்கு இடையே உள்ள வெற்றுப்பகுதியான உள் சுரங்கம் (கேலரி), அணையின் அடிப்பகுதி, வடிகால் பகுதி ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்தனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.10 அடியாக இருக்கும்போது ஒரு நிமிடத்திற்கு 58.46 லிட்டர் அளவுக்கு நீர்க்கசிவு இருக்கிறது என்று தமிழக அரசுக்கு இந்த குழு அறிக்கை அளித்துள்ளது. அணையில் அனுமதிக்கப்பட்ட நீர்க்கசிவின் அளவிற்கு இது மிகவும் குறைவானதுதான்.

அணையின் 17 மற்றும் 18 பிளாக்குகளில் உள்ள கட்டுமான இணைப்புகளில் போடப்பட்டிருந்த தார் நீண்டகாலம் ஆகிவிட்டதால் கொஞ்சம் வெளியே வந்துவிட்டது.அதனால் நீர்க்கசிவு ஏற்பட்டிருப்பதை அணை பாதுகாப்புக் குழு கண்டுபிடித்துள்ளது. அணையின் வழக்கமான பராமரிப்பின்போது இது சரிசெய்யப்படும்.அதன்பிறகு நீர்க்கசிவோ, ஈரமான தன்மையோ இருக்காது. மேலும், ஈரமான தன்மை இருந்ததற்கு சமீபத்தில் பெய்த மழையே காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை மற்றும் தண்ணீர் வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் ஆகியவை சிறந்த செயல்பாட்டில் உள்ளன என்று அணையை ஆய்வு செய்த குழு தெரிவித்துள்ளது.இந்த குழுவின் கருத்துப்படி முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவும், பாதுகாப்பான நிலையிலும் உள்ளது.

அணையில் நீர்க்கசிவு இருக்கிறது என்று கேரள அரசு கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருக்கும் நிலையில் மேற்கண்ட உண்மைகள் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்