ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அவசர தாக்கீது: 10 நாளில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
பெங்களூரு, வெள்ளி, 20 நவம்பர் 2009( 16:23 IST )
ஜெயலலிதா மீதான லண்டன் ஓட்டல் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி ஜெயலலிதா உள்பட 5 பேருக்கு அவசர தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார்.
அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா 1991-96 ஆண்டில் தமிழக முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக தமிழக அரசு அவர் மீது வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கும் லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் லண்டன் ஹோட்டல் வழக்கில் போதிய சாட்சியம் இல்லாததால் அந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிகோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எம். மல்லிகார்ஜுனய்யா நிராகரித்தார்.
சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆஜரானார். வழக்கை நீதிபதி ஜாவித் ரஹீம் விசாரித்தார்.
லண்டன் ஹோட்டல் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன், ஜே.இளவரசி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் 10 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இதற்காக அவர்கள் 5 பேருக்கும் அவசர தாக்கீது அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.