''போலி குடும்ப அட்டைக்கான தணிக்கையின்போது, உண்மையான குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் எவரும் தணிக்கையின்றி தங்களது அட்டை ரத்து செய்யப்பட்டுவிடும் என அஞ்சத்தேவையில்லை'' என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
WD
இது தொடர்பாக அமைச்சர் வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 1,98,90,565 குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொருட்கள் பெற்று வருகின்றனர், இந்த குடும்ப அட்டைகளில் சுமார் 7 சதவீதம் வரை போலி அட்டைகள் இருக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில், புழக்கத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளும் 100 சதவீதம் ஆய்வு செய்யப்பட்டு, போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டன. இந்த களஆய்வுப்பணி நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.
ஆயிரக்கணக்கான பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இப்பணியில் களப்பணியாளர்களின் கவனக்குறைவாலோ அல்லது வேறுகாரணங்களாலோ உண்மையான குடும்ப அட்டைதாரர்கள் யாரும் பாதித்துவிடக்கூடாது என அரசு கருதுவதால் பல்வேறு கட்டங்களில் இப்பணியால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் மேல்முறையீடு செய்யவும் அத்தகைய குடும்பங்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது இப்பணிகள் நடைபெற்று வரும் மாவட்டங்களில் விரைவில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் போலி என சந்தேகிக்கப்படும் குடும்ப அட்டைகளின் பட்டியல் ஒட்டப்படும். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்கள் முகவரி மாற்றம் செய்திருந்தாலோ அல்லது வேறு காரணங்களுக்காக இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தாலோ அவர்கள் அந்தந்த நியாயவிலைக் கடையிலேயே இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை பெற்று குடியிருப்பு ஆதாரத்திற்கான ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அளித்து ஒப்புதல் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு ஒப்புதல் பெற்று கொள்ளும் குடும்ப அட்டைதாரர்கள் தொடர்ந்து பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம். இவர்களது மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் தொடர்ந்து பொருள் வழங்க ஆணையிடப்படும். தகுதியற்றவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும்.
உரிய காலத்துக்குள் நியாயவிலைக் கடையில் முறையீடு செய்துகொள்ள இயலாதவர்களுக்கும், பொருள் நிறுத்தம் செய்யப்பட்டவர்களுக்கும் மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். இதன்படி குடும்ப அட்டைகள் பொருள் நிறுத்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சென்னை நகரில் சம்மந்தப்பட்ட துணை ஆணையாளர்களுக்கும், மாவட்டங்களில் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். மேல்முறையீடு மனுக்கள் விரைவாக விசாரணை செய்யப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு மீண்டும் பொருள் வழங்க ஆணையிடப்படும்.
இவ்வாறு குடும்ப அட்டைகள் 100 சதவீதம் வீடுவீடாக தணிக்கை செய்யும் பணியின் காரணமாக உண்மையில் வசிக்கும் எந்த ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் எந்த நிலையிலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் பொருள் வழங்கல் நிறுத்தம் செய்யும் முன்பாகவும் பொருள் நிறுத்தம் செய்யப்பட்டு குடும்ப அட்டை ரத்து செய்யப்பட்ட நிலையிலும் உரிய அலுவலர்களுக்கு முறையீடு மற்றும் மேல்முறையீடு செய்து கொள்ளவும் வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.
சென்னை மாநகரில் மட்டும் இவ்வாறு சந்தேகத்துக்குரிய குடும்ப அட்டைகள் விவரம் உணவுப்பொருள் வழங்கல் துறையின் இணையதளம் மூலம் வெளியிடப்படும். இணையதள முகவரி, பின்னர் தெரிவிக்கப்படும்.
உண்மையான குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் எவரும் தணிக்கையின்றி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுவிடும் என அஞ்சத்தேவையில்லை. இது குறித்து குடும்ப அட்டைதாரர்களுக்கு சிரமங்கள் ஏற்படின் சம்மந்தப்பட்ட மாவட்ட வழங்கல் அலுவலருக்கும், மாநில நுகர்வோர் உதவி மையம் தொலைபேசி (044-28592828) மற்றும் உணவு அமைச்சர் அலுவலக தொலைபேசிக்கு (044-25670204) தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.