தமிழகத்தில் பெய்து வரும் பரவலான பருவ மழை காரணமாக சிதம்பரத்தில் சுமார் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீராணம் ஏரி நிரம்பி வழிவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. தொடர்ந்து சீராக மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக, சென்னையில் இருந்து திருச்சி வழியாக வரும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் சுமார் 3 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு தஞ்சை ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது.
நாகை மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி முதல் தொடர்ந்து 5 மணி நேரம் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக சீர்காழியில் 9.5 செ.மீ மழை பதிவாகியது.
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம் பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற் பயிர்கள் பாதியளவு தண்ணீரில் மூழ்கி உள்ளன. மழை தொடர்ந்தால் இந்த பயிர்கள் முழுமையாக மூழ்கி விடும் அபாயம் உள்ளது.
திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களின் மழை நீர் வடிகாலாக வெண்ணாறு மற்றும் கிளை ஆறுகள் உள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகின்றது.
தென்காசி, குற்றாலம் பகுதிகளிலும் பலத்த மழை 3 நாட்களாக பெய்து வருகிறது. இதை தொடர்ந்து குற்றாலத்தில் அனைத்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நேற்று 4-வது நாளாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
சிதம்பரத்தில் பெய்து வரும் மழையினால் சுமார் 500 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை மேடான இடங்களில் தங்க வைப்பதற்கு தேவையான ஆயத்த பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடி. ஏற்கனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் பருவமழை காலங்களில் ஏரியின் நீர்மட்டத்தை 43.50 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்று அறிவித்து உள்ளது.
இதற்கிடையில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீராணம் ஏரிக்கு நீர் வெளியேற்றப்படுகிறது. இது தவிர சென்னைக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
நேற்று முன் தினம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.80 அடியாக இருந்தது. நேற்று .30 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் தற்போது ஏரியின் நீர் மட்டம் 43.50 அடியாக உள்ளது.