வெள்ளதடுப்பு நடவடிக்கை பற்றி கருணாநிதி அவசர ஆலோசனை

ஞாயிறு, 8 நவம்பர் 2009( 09:50 IST )
கன்னியாகுமரியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதாலும், பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையிலும், வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் கருணா நிதி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் தயா நிதி மாறன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும் கடந்த 10 நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களிலும், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சென்னை நகரிலும், புறநகர் பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்றும் தொடர்ந்து கொட்டித் தீர்த்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்:
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று குமரி கடலில் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா பகுதி வழியாக ஊடுருவி தமிழகத்தில் தென் மேற்கு வங்கக்கடல் வழியாக ஆந்திர மாநில மத்திய மேற்கு வங்கக்கடல் வரை நீடிக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழையும், உள்மாவட்டங்களில் பரவலான மழையும் பெய்து உள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மழையோ, கனமழையோ பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கத்தில் தலா 14 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது.
பொன்னேரியில் 13 செ.மீ. மழையும், சென்னை விமான நிலையம், மதுராந்தகம், சோழவரம், கடலூர் ஆகிய பகுதிகளில் தலா 11 செ.மீ. மழையும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மணிமுத்தாறு மற்றும் பாபநாசத்தில் தலா 10 செ.மீ. மழையும், சென்னை நுங்கம்பாக்கம், செய்ïர், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, கொரட்டூர், திருவள்ளூர், கொள்ளிடம், சீர்காழி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழையும், காஞ்சீபுரம், தாம்பரம், சிதம்பரத்தில் தலா 8 செ.மீ. மழையும், பூண்டி, தாமரைப்பாக்கம், புதுச்சேரி விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழையும், செஞ்சியில் 6 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.
என்று கூறினார்.
வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆறு, குளம், ஏரிகள் உடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், வெள்ளத்தடுப்பு பணியில் விழிப்புடன் இருக்குமாறும் அரசு அதிகாரிகளுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறார். இதனால் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.