டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அ.இ.அ.தி.மு.க சார்பில் நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பதிலாக கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பணிபுரியும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று காலை உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் ஆர்.சின்னசாமி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, வி.பி.கலைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதத்தை தலைமை நிலையச் செயலர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். காலை 9 மணிக்கு துவங்கிய இந்த உண்ணாவிரதத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருந்ததால் ஊழியர்கள் நனைந்து கொண்டே போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த தொடர் மழை குறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் உண்ணாவிரதத்தை ஆர்ப்பாட்டமாக நடத்திவிட்டு ஊழியர்கள் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.