மழை நீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்
சென்னை, சனி, 7 நவம்பர் 2009( 13:47 IST )
சென்னையில் தேங்கி கிடந்த மழை நீரை பார்வையிட்ட துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவற்றை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னையில் கடந்த 4 நாட்களாக இடைவிடாத கன மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் சூழ்ந்து நிற்கிறது. ஒவ்வொரு வீதிகளிலும் பள்ளம் மேடு தெரியாத அளவுக்கு தண்ணீர் வெள்ளம் போல் ஓடுகின்றன. சில பகுதிகளில் மழை நீர் வடிகால் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியது.
இதையறிந்த துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கொட்டும் மழையில் மழை நீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டார். சூளை அவதான பாப்பையா சாலைக்கு சென்ற மு.க.ஸ்டாலின், மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு கூடுதலாக மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.
பின்னர் மாம்பலம் கால்வாயில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தியாகராயநகர் ஜி.என். செட்டி சாலை, அபிபுல்லா சாலை ஆகிய இடங்களிலும் வெள்ளம் தேங்கி இருந்ததை பார்வையிட்ட ஸ்டாலின், நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அயோத்தியா குப்பத்தில் மாநகராட்சி சார்பில் மழைக் கால சிறப்பு மருத்துவ முகாமை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிகிச்சை அளிப்பதையும் அவர் பார்வையிட்டார். மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விரைந்து செயல் பட்டு மழைநீர் தேக்கத்தை வெளியேற்றவும் உத்தரவிட்டார்.
அப்போது மேயர் மா. சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் உடனிருந்தனர்.