வளர்ந்த மரங்களை வெட்டும் கும்பல்: தண்ணீர் ஊற்றி வளர்த்தவர் தவிப்பு
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு, சனி, 7 நவம்பர் 2009( 12:35 IST )
webdunia photo
WD
கோபி அருகே இரவு நேரங்களில் மரம் வெட்டும் கும்பலை பிடிக்க தண்ணீர் ஊற்றி வளர்த்த முதியவர் வருவாய்துறையிடம் புகார் செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுக்கா ஏழூர் அருகே உள்ளது வேட்டுன்புதூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (74). இவர் சிறு வயதில் இருந்து ஆடுகள் வைத்து அதை மேய்த்து வாழ்க்கை நடத்தி வருகிறார். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது அருகில் ரேடியோ பாடிக் கொண்டிருந்தது.
பாட்டிற்கு இடையில் மரக்கன்று நடுவதின் முக்கியதுவத்தையும் மரத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் கூறியுள்ளனர். இந்த தகவல் அய்யாசாமியின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. உடனே இவர் அப்பகுதியில் சுமார் ஐந்தாயிரம் மரக்கன்றுகள் நட்டி அதற்கு தண்ணீர் ஊற்றி குழந்தைபோல் பராமரித்துள்ளார்.
webdunia photo
WD
இவரின் பெருமுயற்சியால் இரண்டாயிரம் மரங்களை காப்பாற்றியுள்ளார். புவி வெப்பமடைந்து ஓசோன் படலம் ஓட்டை விழும் இந்த நிலையில் இந்த மரங்கள் முக்கியமானதாக விளங்குகிறது. இப்படியிக்க கடந்த சில நாட்களாக சில சமூக விரோதிகள் இந்த மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். இதனால் அய்யாசாமி மனமுடைந்துள்ளார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோபி ஆர்.டி.ஓ. மகேஸ்வரருக்கு புகார் அனுப்பியுள்ளார். தண்ணீர் ஊற்றி குழந்தைகளைபோல் வளர்த்த மரங்கள் வெட்டப்பட்டது வேதனையளிப்பதாக அய்யசாமி கண்ணீருடன் கூறினார்.