வழக்கறிஞர்கள்- காவலர்கள் மோதல் குறித்து ஜெயலலிதா கூறுவது பொருத்தமானதல்ல: கருணாநிதி
கோவை, சனி, 7 நவம்பர் 2009( 11:31 IST )
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள்- காவலர்கள் மோதல் நிகழ்வுக்கு என்னைப் பொறுப்பேற்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கூறுவது பொருத்தமானதல்ல என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை உயர் நீதிமன்ற மோதல் சம்பவம் தொடர்பான உத்தரவில், தமிழக அரசின் மீது எந்தக் குற்றச்சாற்றும் சுட்டிக்காட்டப்படவில்லை. மாறாக, மருத்துவமனையில் இருந்தும் கூட நீதிபதிகளைத் தொடர்பு கொண்டு அக்கறையோடு விசாரித்து ஆவன செய்திருக்கிறார் என்று என்னையும், தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளையும் பாராட்டி உள்ளனர்.
ஆனால், உயர் நீதிமன்ற சம்பவத்துக்கு நாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ள ஜெயலலிதா, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மூலம் குற்றச்சாற்றுகள் கூறப்பட்டபோது முன்உதாரணமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
2005ஆம் ஆண்டு இறுதியில் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண உதவி வழங்கியபோது நெரிசலில் சிக்கி 48 பேர் இறந்தனர். அந்தச் சம்பவத்துக்கு சென்னை மாநகராட்சி தி.மு.க உறுப்பினர் தனசேகரன் பரப்பிய வதந்திதான் காரணம் எனக் கூறி அவரை அப்போதைய அ.தி.மு.க அரசு கைது செய்தது. அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில், அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
மேலும், தனசேகரனுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய பிணை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நிவாரண நிதி வழங்கியபோது ஏற்பட்ட சம்பவத்துக்கு அரசே முழுப் பொறுப்பு என்று கூறியது. இந்த நேரடி குற்றச்சாற்றையே பொருட்படுத்தாமல் இருந்தவர் ஜெயலலிதா.
இப்போது அரசின் மீதும் அமைச்சர்கள் மீதும் நீதிமன்றம் எவ்விதக் குற்றச்சாற்றையும் கூறாத நிலையில் 4 காவல்துறை அதிகாரிகள் மீது சொல்லப்பட்ட குற்றச்சாற்றுக்கு நாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது பொருத்தமானதல்ல.
கேரள அதிகாரிகள், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழக அரசின் சட்டபூர்வமான செயல்பாடுகளைக் கூட தடுக்கின்ற நிலை குறித்து மத்திய அரசுக்கு குறிப்பாக பிரதமருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அதற்காக மத்தியப் பாதுகாப்பு படை வேண்டும் எனக் கோரப்பட்டது. அதற்கு இன்னும் உரிய பதில் கிடைக்கவில்லை.
காஞ்சிபுரம் அண்ணா நூற்றாண்டு விழாவில், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற தீர்மானம் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தி.மு.க எம்.பி.க்களால் முன்வைக்கப்பட்டு ஆதரவு கோரப்பட்டது. இந்த விஷயத்தை மத்திய அரசு அனுதாபத்துடன் அணுகி வருகிறது. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும், சட்டப் பிரச்சனைகளை ஆய்வு செய்து முடிவு எடுக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களுக்கு அமைச்சர்களின் அறிக்கையைப் பெற்ற பிறகு தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். தி.மு.க அணியில் புதிய கட்சிகள் சேருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று கருணாநிதி கூறினார்.