விளையாட்டுப் போட்டிகளில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கக்கூடாது'
சென்னை, சனி, 7 நவம்பர் 2009( 11:06 IST )
தமிழக பள்ளிக் கல்வித் துறை நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள தடைவிதிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ.பள்ளியில் படித்த மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்கள் அடிப்படையில் தொழிற்கல்வி படிப்பில் சேர்வதற்கு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மார்க்குகள் வழங்கப்படுவதில்லை. 2008-2009ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.பள்ளிகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் சி.பி.எஸ்.இ.மாணவர்களுக்கு தனி மார்க்குகள் வழங்கப்படுகின்றன.
எனவே, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் 23.7.2008 அன்று அனைத்து உயர் கல்வி அதிகாரிகளுக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.எஸ்.இ.மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி கே.சந்துரு விசாரித்து அளித்த தீர்ப்பில், 2007-2008ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 2 விதமான சலுகைகள் கிடைக்கின்றன என்று தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. விளையாட்டை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. மாணவர்களின் கோரிக்கையை நிராகரிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
1992ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான வழிமுறைகளை பரிந்துரைப்பதற்காக மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள், கல்வியாளர்கள் குழு அமைக்க உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைகளை பரிசீலிக்க அரசு குழு அமைத்து முடிவு எடுக்கலாம்.
அதுவரை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கக்கூடாது. குழு அமைப்பது தொடர்பான வழிமுறைகளை உருவாக்குவது அரசைப் பொருத்த விஷயமாகும். இதில் அரசுக்கு உயர் நீதிமன்றம் எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.