'கள்ளுக்கு அனுமதி வழங்காவிட்டால் பிராந்தி-விஸ்கி தயாரித்து விற்போம்'
திருப்பூர், சனி, 7 நவம்பர் 2009( 10:29 IST )
கள்ளுக்கு அனுமதி வழங்காவிட்டால் ஜனவரி 21ஆம் தேதியில் இருந்து பிராந்தி தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி, தற்போது சர்க்கரை ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,540 தான் வழங்கப்படுகிறது. ஒரு டன் கரும்பில் இருந்து 95 கிலோ சர்க்கரை, 100 யூனிட் மின்சாரம், 45 கிலோ மொலாசயஸ் ஆகியவை தயார் செய்யலாம்.
விவசாயிகளிடம் இருந்து ஒரு டன் கரும்பை ரூ.1,540க்கு வாங்கும் அரசு அதன் மூலம் அதிகமாக சம்பாதிக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு குறைவான விலையையே கொடுக்கிறது.
வெளிமார்க்கெட்டில் ஒரு டன் கரும்பை ரூ.2,200க்கு வாங்குகிறார்கள். அவர்களே வந்து கரும்பை வெட்டி செல்கிறார்கள். ஆனால் கரும்பு சர்க்கரை ஆலைக்கு நாம் கொடுக்கும்போது வெட்டுக்கூலி, ஆள்கூலி ஆகியவைகளை விவசாயிகளே கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கரும்பு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை கொடுப்பது இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
'கள்' உணவின் ஒரு பகுதி என்பதால் 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கேட்டு வருகிறார்கள். இது குறித்து விசாரிக்க குழு நியமனம் செய்யப்பட்டு உள்ளது. அந்த குழு இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் தங்களின் அறிக்கையை அரசுக்கு கொடுக்க வேண்டும். அரசு விவசாயிகளுக்கு நல்ல முடிவை அறிவிக்கும் என விவசாயிகள் அனைவரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
அவ்வாறு 'கள்'ளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றால் நியாயத்தின் அடிப்படையில், தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி முதல் பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களை நல்ல முறையில் தயார் செய்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று நல்லசாமி கூறினார்.