வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து வருவதால், தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இப்போது விரிவடைந்துள்ளது என்றும் இது கன்னியாகுமரி பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா வழியாக தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்தின் கடலோரப் பகுதி வரை நீண்டு காற்றழுத்தத் தாழ்வு நிலையாக பரவியுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியுள்ளார்.
இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக் கூடும் என்றும் தமிழகத்தின் உட்பகுதி மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மழை பெய்யக் கூடும் என்றும் ரமணன் தெரிவித்துள்ளார்.