தொடர் மழை: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
புதுச்சேரி, வியாழன், 5 நவம்பர் 2009( 09:20 IST )
தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்த பகுதியிலேயே நிலை கொண்டுள்ளது.
இதனால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இன்று புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.