கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் 958 சதுர கி.மீ பரப்பளவு உள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட இப்பகுதிகளில், சந்தன மரங்கள் அதிகம் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தன மரங்கள் கடத்தல் தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வனத்துறை உயர் அதிகாரிகள் சோதனை நடத்தியதில், உடுமலை சரகத்துக்குட்பட்ட குழிப்பட்டி, மானுபட்டி, மாவடப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, குழிப்பட்டி வனப்பகுதியில் இருந்து சமவெளி பகுதிக்கு வரும் 7 வழித்தடங்களிலும் துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரோந்து பணியை ஆய்வு செய்த ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பசவராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், குழிப்பட்டி, மானுப்பட்டி, மாவடப்பு, அப்பர் ஆழியாறு உள்ளிட்ட ஆயிரம் ஹெக்டரில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன.
குழிப்பட்டி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 559 சந்தன மரங்களை சமூக விரோதிகள் வெட்டி கடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. 25 பேர் கும்பல், மரங்களை வெட்டி சுமார் 23 கி.மீ தூரம் சிறிது, சிறிதாக கடத்தியுள்ளது.
பல இடங்களில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 7.3 டன் சந்தன மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரகசிய தகவலின்பேரில், பொள்ளாச்சியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த 9 பேரை பிடித்து விசாரித்தோம். இதில், சந்தன மரங்களை கடத்துவதற்காக வந்திருந்த சென்னையைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளோம்.
வனப்பகுதியில் 23 இடங்களில் முகாம்கள் அமைத்து 85 காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 42 பேர் புதிய காவலர்களையும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தவுள்ளோம். சந்தன மர கடத்தலில் வனத்துறையினருக்கு தொடர்பு இருக்கிறதா என்று உதவி வனபாதுகாப்பாளர் விசார ணை நடத்தி வருகிறார். யாருக்கு தொடர்பு இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பசவராஜ் கூறினார்.