மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் வேல்முருகன் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் அனந்தலட்சுமி (வயது 39).இவருடைய கணவர் ராமசுப்பிரமணி. பெங்களூரில் பணியாற்றி வருகிறார். மகன் சூரஜ், மகள் ஷோபனா, ஆகியோருடன் அனந்தலட்சுமி தனியாக போஸ்டல் காலனியில் வசித்து வந்தார்.
இதற்கிடையே அனந்தலட்சுமிக்கு பழக்கமான திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகன் வேல்முருகன் (28), அனந்தலட்சுமி கொலை செய்யப்பட்ட அன்றைய தினத்தில் இருந்து தலைமறைவானது தெரிய வந்தது. இதனை அடுத்து வேல்முருகனைத் தேடும் பணியில் தனிப்படையினர் தீவிரம் காட்டினர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று மாலை மாஜிஸ்திரேட்டு ரபி முன்னிலையில் வேல்முருகன் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து வேல்முருகன் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வேல்முருகன் பி.எஸ்.சி பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னை வந்து மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். புதுச்சேரியில் ஒரு ஓட்டலில் வரவேற்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
அனந்தலட்சுமி, அவருடைய மகன் சூரஜ் கொலை நடந்த மறுநாளே வேல்முருகன் ஊட்டிக்கு தப்பி வந்துவிட்டதாகவும், ஊட்டியில் சில நாட்களாக தலைமறைவாக சுற்றி திரிந்ததாகவும் வேல்முருகன் கூறி உள்ளார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வரும் தகவல் அறிந்ததும், வேல்முருகன், ஊட்டியை சேர்ந்த வழக்கறிஞர் தினேஷை சந்தித்து தான் சரண் அடைய விரும்புவதாக தெரிவித்தார்.
அதையடுத்து நேற்று மாலை வழக்கறிஞரின் ஏற்பாட்டின்பேரில் அவர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
வேல்முருகனிடம் கொலைக்கான காரணம் பற்றிக் கேட்டதற்கு, எனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் ரூ.1000, ரூ.500 என அனந்தலட்சுமியிடம் இருந்து பணம் வாங்கி வந்தேன். எனக்கு ரூ.30 ஆயிரம் அவசரமாக தேவைப்பட்டது. அனந்தலட்சுமியிடம் கேட்டதற்கு, தருவதாகக் கூறினார். இந்த நிலையில் கொலை நடந்த 24-ந்தேதி குடிபோதையில் அவருடைய வீட்டுக்கு சென்றேன். அனந்த லட்சுமியை சந்தித்து ரூ.30 ஆயிரம் தருமாறு கேட்டேன். ஆனால் அவர் பணம் தரமுடியாது என்று கூறி விட்டார். பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் சென்ற எனக்கு அனந்தலட்சுமி பணம் தரமறுத்ததால் ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அனந்தலட்சுமியை கொலை செய்தேன். கொலையைப் பார்த்த அனந்தலட்சுமியின் மகன் சூரஜையும் கொலை செய்தேன். அதன்பிறகு சென்னையில் இருந்து வெளியேறி பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்தேன். பின்னர் ஊட்டிக்கு வந்தேன். ஊட்டியில் இருந்து பெங்களூர் அல்லது மும்பைக்கு தப்பிச்செல்லலாம் என்று இருந்தேன். பின்னர் வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்திவிட்டு சரண் அடைந்துவிட்டேன் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வேல்முருகனிடம் நடத்தப்படும் விசாரணையின் மூலமே, அனைத்து விவரங்களும் தெரியவரும். வேல்முருகன் நீதிமன்ற காவலில் 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், காவல்துறை காவலில் எடுத்து வேல்முருகனிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.