மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவதற்கு தமிழக அரசு ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் அனுமதித்துள்ளது.
காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு வரும் 15ஆம் தேதி (ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் இடையே பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று மாநில அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய அரும்பணிகளைப் பாராட்டி அவரது பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று கடந்த 2006ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதும் அறிவித்தது நினைவிருக்கலாம்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் பங்கு பெறும் கல்வி வளர்ச்சி நாளாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. |