தொண்டாமுத்தூர், பர்கூர், இளையான்குடி, கம்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்தார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி இடை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தயார் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்றும் இதில் இடைத்தேர்தலுக்கான ஆயத்த பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.
மாவட்ட வாரியாக பெற்ற வாக்காளர் பட்டியல்களை சென்னை தலைமை அலுவலகத்தில் உள்ள கணினியுடன் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்த நரேஷ் குப்தா, இவ்வாறு மாற்றுவதால் மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களை சென்னையில் இருந்தே எடுத்துக் கொள்ளலாம். மேலும் எந்த ஒரு பகுதியிலும் வாக்காளர் பட்டியல் பெயரை சேர்த்தாலோ அல்லது நீக்கினாலோ சென்னையில் இருந்தே கண்டு பிடித்து விடலாம் என்றார்.
தற்போது அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், கோவை மாவட்டத்தில் ஏராளமான குடும்ப அட்டைகள் போலியானது என தெரியவந்துள்ளது என்றும் வாக்குப்பதிவின் போது குடும்ப அட்டையை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறிய கருத்துக்கு இது வலு சேர்ப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
தொண்டாமுத்தூர், பர்கூர், இளையான்குடி, கம்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும் என்று நரேஷ் குப்தா கூறினார். |