பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி வரும் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற பால் உற்பத்தி நிறுத்த போராட்டமும், கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டமும் நடைபெறும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல், துணைத் தலைவர் ராஜகோபால், பொதுச்செயலர் ராஜேந்திரன், கலப்புத் தீவன விலையேற்றம் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. தவிடு மற்றும் புண்ணாக்கு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் பால் கொள்முதல் விலை பசும்பாலுக்கு லிட்டர் 20 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கு லிட்டர் 30 ரூபாயாகவும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டு வருகிறோம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் கீழ் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், கிராமங்களில் உற்பத்தியாளர் சங்கம் ஆகியவை இயங்கி வருகிறது. கிராம சங்கங்களில் 25 ஆயிரம் பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த சங்கங்களுக்கு நடத்தப்படாமல் இருக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டு வருகிறோம்.
மாதிரி சட்டத்தை இயற்றி அதன் அடிப்படையில் பால் கூட்டுறவு அமைப்பை அமல்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தித்தரவும், பணியாளர்களுக்கு பணி வரன் முறைப்படுத்தி ஊதியம் நிர்ணயிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்களது இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக அரசு கூறியது.
தற்போது தேர்தல் முடிந்த பின்னும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தற்போது பசும்பாலுக்கு ரூ.13.50-க்கும், எருமைப்பாலுக்கு ரூ.18.50-க்கும் என கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த கொள்முதல் ஒன்றிய அளவில் வரும்போது 1 ரூபாய் குறைகிறது. எனவே எங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி வரும் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற பால் உற்பத்தி நிறுத்த போராட்டம், கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று அவர்கள் கூறினர். |