பெட்ரோல், டீசல் விலையை உயர்வை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் வருகிற 14ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு கடுமையாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருப்பது நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் வருகிற 14ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி முடிவு செய்யும்போது அதன் உற்பத்தி விலை, உற்பத்தியின் அளவு, தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு செய்வதில்லை. தேர்தலை மையமாக வைத்து செயல்படுகிறார்கள்.
கடந்த முறை 4 மாநில சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தேர்தல் விதிமுறையை மீறி தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று அறிவித்தார்கள். இனி ஒரு ஆண்டுக்கு எந்த தேர்தலையும் சந்திக்கும் கட்டாயம் காங்கிரசுக்கு இல்லை.
எனவே இந்த விலை உயர்வை தன்னிச்சையாக அறிவித்துள்ளார்கள். இது ஏழை, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும். இந்த விலை உயர்வு அநியாயமானது. அனாவசியமானது. மத்திய அரசு உடனே மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார். |