10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது குறித்து கல்வியாளர்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள் போன்ற அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டிலும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ள கருத்து பற்றி தேசிய அளவில் விவாதம் நடந்து வருகிறது. தமிழ் நாட்டிலும் இதற்கு ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 6, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மேல் நிலைப்படிப்புகளை தொடர முக்கியமான படிக்கல் போன்றது. பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., 12ஆம் வகுப்பு படிப்பை தொடர இது தேவைப்படுகிறது.
மத்திய அமைச்சர் சொல்லி இருப்பது ஒரு கருத்துதான். மாநில அரசுகளுடன் கலந்து பேசி பின்னர் முடிவெடுக்கலாம் என்றுதான் அவர் கூறி இருக்கிறார். மத்திய அரசு மாநில அரசிடம் இதுவரை கருத்து ஏதும் கேட்கவில்லை.
அப்படி கருத்துகேட்டால் தமிழ்நாட்டில் கல்வியாளர்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள் போன்ற அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு முதலமைச்சரையும் கலந்து ஆலோசித்து அதன் பிறகு மத்திய அரசுக்கு கருத்து தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். |