சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் கேட்பாரற்று ஒரு அட்டை பெட்டி ஒன்று கிடந்தது. அந்த பெட்டியில் இருந்து சிவப்பு நிறத்தில் திரவம் போல் கசிந்து வெளியேறியது.
இதை பார்த்த விமான நிலைய ஊழியர்கள் ரத்தக்கறையுடன் ஒரு பெட்டி புறப்பாடு பகுதியில் கிடப்பதாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அப்பெட்டியை சோதனை செய்தனர்.
அப்போது பெட்டியில் 2 கிலோ எடையுள்ள ஊறுகாய் பாட்டில் ஒன்று உடைந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. விமானப் பயணி கூடுதலாக எடை இருந்ததை அடுத்து ஊறுகாய் அடங்கிய பெட்டியை அங்கேயே விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. |