5 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு தந்தை மீது மகள் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த கவுசியா (32) என்பவர் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது தந்தைக்கும், தாயாருக்கும் 1970ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 1976-ல் நான் அவர்களுக்கு மகளாக பிறந்தேன். இந்த சூழ்நிலையில் எனது தந்தை இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார்.
இதனால் எனது தாயார் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் எனது தாயார், எனது தந்தையிடம் இருந்து மாதம் ரூ.350 வீதம் ஜீவனாம்சம் பெற்று வந்தார்.
32 வயதான நான் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டதால் வேலை செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். முழுக்க, முழுக்க எனது தாயார் பராமரிப்பில் இருந்து வருகிறேன். எனது தாயார் தொடர்ந்த விவாகரத்து வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே, எனது எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. ஆகவே எனது எதிர்காலத்துக்காக, எனது தந்தை ரூ.5 லட்சத்தை ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட வேண்டும்.
எனது தந்தை இரயில்வே துறையில் கேட்டரிங் பிரிவில் சமையல்காரராக வேலைபார்த்து வருகிறார். அவர் இந்த பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையில் இருந்து எனக்கு ரூ.5 லட்சத்தை வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம், மனுதாரரின் தந்தைக்கு இரயில்வே நிர்வாகம் ஓய்வூதிய தொகையை வழங்குவதற்கு இடைக்கால தடை விதித்தார்.
|