பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சரக்கு லாரி வாடகையை 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.
எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை சரிக்கட்ட மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதாக கடந்த சில நாட்களாக கூறி வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்தி அறிவித்தது.
இந்த திடீர் விலையேற்றம் காரணமாக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சரக்கு போக்குவரத்தை கையாளும் லாரி உரிமையாளர்கள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். டீசல் விலை ஏற்றம் காரணமாக, சரக்கு லாரி வாடகையை 25 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச்செயலர் பழனிசாமி கூறுகையில், தமிழகத்தில் 1.65 லட்சம் சரக்கு லாரிகள் உட்பட நாடு முழுவதும் 16 லட்சம் சரக்கு லாரிகள் ஓடுகின்றன. லாரி தொழிலை நம்பி ஓட்டுநர், உதவியாளர், மெக்கானிக், மூட்டை தூக்கும் தொழிலாளி என நேரடியாக 2.50 கோடி பேர் உள்ளனர்.
இப்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.20 வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஏற்கனவே வேலை ஆட்கள் கிடைக்காமல் லாரி தொழில் நசிந்து, தொடர்ந்து தொழில் நடத்த முடியாத நிலையில் டீசல் விலை உயர்வு அறிவிப்பு அதிர்ச்சியாக உள்ளது.
இந்த விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர் சம்மேளனம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. விலை உயர்வை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு லாரி வாடகையை 25 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் 13ஆம் தேதி நடைபெறும் மாநில சம்மேளன கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று பழனிசாமி கூறினார். |