10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்கள் தொழில் படிப்புகளில் சேர்வதற்கு சிரமப்படுவார்கள் என்றும் இதனால் 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கூடாது என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்த விசாரணையை நீதிபதி லிபரான் தலைமையில் குழு ஒன்று விசாரித்து வந்தது. இக்குழு தனது அறிக்கையை 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.இந்த நாடாளுமன்ற தொடரிலேயே இந்த விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் எவ்வளவு உயர் பதவிகளில் இருந்தாலும் நடவடிக்கை அவசியம். அப்படி நடவடிக்கை எடுத்தால்தான் மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தி விலகும்.திருமணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதனை திராவிடர் கழகம் வரவேற்கிறது. புரோகிதர் மூலம் திருமணம் நடைபெற்றாலும், கோயில்களில் திருமணங்கள் நடைபெற்றாலும், சுயமரியாதை திருமணமாக நடை பெற்றாலும் அவைகள் அனைத்தும் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.பால் டெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ படிப்புகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்வு தகுதி உடையதாக தற்போது உள்ளது. இதனால் 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்கள் தொழில் படிப்புகளில் சேர்வதற்கு சிரமப்படுவார்கள். அதனால் 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கூடாது.காவிரி, முல்லைபெரியாறு, ஒகேனக்கல் குடிநீர் திட்டம் போன்றவைகளில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும். இதில் அரசியல் பாரபட்சம் வேண்டாம் என்று கி.வீரமணி கூறினார். |