பிராமணர் சமுதாயம் பேசுகிற வழக்கான சொல்லை அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் பேரவையில் பேசி பிராமணர் சமுதாயத்தை புண்படுத்தியிருக்கிறார். எனவே இது போன்ற கருத்துக்களை அவையில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் எஸ்.வி.சேகர் கேட்டுக் கொண்டார்.
இலங்கை பிரச்சனை பற்றி நேற்று அவையில் அ.இ.அ.தி.மு.க சார்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் பிராமணர் சமுதாயம் பேசுகிற மாதிரி பேசினார்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் எஸ்.வி.சேகர் ஒரு பிரச்சனையை எழுப்பி பேசுகையில், நேற்று இந்த அவையில் பேசிய ஒருவர் அவா அவா செய்த பாவம் அவாளுக்கு. நீங்க செய்த பாவம் நோக்கு; நாங்க செய்த பாவம் நேக்கு என்று பேசினார். இது பிராமணர் சமுதாயம் பேசுகிற வழக்காகும். இதை கூறி கேலி செய்வது போல பேசி பிராமணர் சமுதாயத்தை அவர் புண்படுத்தியிருக்கிறார். இதை நகைச்சுவையாக கூட எடுத்துக் கொள்ள முடியாது.
ஏனென்றால் அவர் பேசியது, இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் பிரச்சனையை பற்றி. அதில் நகைச்சுவைக்கு இடமில்லை. இந்த அவையில் அவர் தெரிவித்த கருத்துக்களை அடுத்து பல்வேறு பிராமணர் சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு இதை அவையில் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் இதை இப்பொழுது எழுப்புகிறேன். இறைவன் முன்பு அனைவரும் சமம். எனவே இது போன்ற கருத்துக்களை வெளியிட அவை அனுமதிக்கக் கூடாது என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவை முன்னவர் அன்பழகன், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை கூறி இப்படிப்பட்ட கருத்தை வெளியிட்டிருந்தால் அது அவை நடவடிக்கையில் இடம் பெற கூடாது என்று சொல்லலாம். ஆனால் ஒரு வழக்கு சொல்லை அது தமிழாக இருந்தாலும், ஆங்கிலமாக இருந்தாலும், ஹிந்தியாக இருந்தாலும் சொல்லும் போது அது குறித்து நடவடிக்கை எடுக்க முடியாது.
அதே சமயம் யாரையாவது புண்படுத்தும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டிருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறினார். |