தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்தச் செய்ய வேண்டும்.
நம்முடைய குரல் உயர்ந்த அளவிற்கு மத்திய அரசின் குரல் உயர்த்தப்படவில்லை என்ற கருத்தை இங்கு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் பேசியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. எனவே சிங்களர்களுக்கு எதிராக பேசி அவர்களை கோபமடைய செய்யக் கூடாது. சிங்கள பௌத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
எனவேதான் இலங்கை தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குப் போக்குடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக தெரிந்தவன் நான். இதை 'பண்டாரக வன்னியன்' என்ற நாவல் மூலம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.
இலங்கை தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவர்களை சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செஞ்சிலுவை சங்கம் மூலம் தமிழக அரசும், மத்திய அரசும் நிவாரண உதவிகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.
தற்போது வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களும் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயம் தமிழர்களிடம் அந்த பொருட்களை கொண்டு சேர்க்கப்படும்.
இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி என்னிடம் கலந்து பேசுவதற்காக இலங்கை அமைச்சர் தொண்டமான் தலைமையிலான குழு என்னைச் சந்தித்த போது, தமிழகத்தில் இருந்து ஒரு குழு இலங்கைக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழிவகைகளை சிங்கள அரசு மூலம் நீங்கள் செய்யுங்கள்; நாங்கள் துணை நிற்கிறோம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்று அவர்களிடம் நானே பேசியிருக்கிறேன்.
இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும் இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்றார் முதல்வர் கருணாநிதி.
இதையடுத்து பேசிய ஜி.கே.மணி இலங்கை விஷயத்தின் தனது கட்சியின் நிலையை விளக்கினார். அவர் கூறுகையில் பாமகவைப் பொறுத்தவரை தமிழீழம்தான் இறுதி தீர்வு என்பதில் உறுதியாக இருக்கிறோம். இடைக்காலத் தீர்வாக தமிழர்களுக்கு மாநில சுயாட்சி கிடைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம் என்றார். |