இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்தச் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவது குறித்தும் விவாதிக்க சட்டப்பேரவை இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன்மீது, உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), ராமசாமி (இந்திய கம்யூ.) ஆகியோர் தீர்மானம் குறித்து விவாதித்தார்கள்.
இலங்கையில் தமிழர்களின் நிலைமை படுமோசமாக இருப்பதாகவும், திறந்தவெளியில் ஆடு, மாடுகளை போல் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்கள், அந்த மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்று கோரினர்.
மேலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றும் முயற்சிகளை தடுத்து வடக்கு, கிழக்கு பகுதிகளை மீட்டு தமிழர்கள் முழு உரிமையுடன் சிங்களர்களுக்கு இணையான சமவாழ்வு வாழ்வதற்கு மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு பதிலளித்து முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சனையை அரசியல் ஆக்காமல் அனைத்து கட்சியினரும் ஒரே விதமான கருத்தை இன்று தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு இதில் பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழீழம் என்கிற பிரிவினைக்கு ஆதரவு இல்லை. மாநில சுயாட்சி என்ற அளவில்தான் தீர்வு அமைய வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தமிழீழம்தான் தீர்வு என்று தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.
பாமக கூட தமிழீழம்தான் தீர்வு என்று பேசி வந்தது. ஆனால் இன்று மாநில சுயாட்சி போதும் என்ற அளவிற்கு பேசி இருக்கிறார்கள். அதுதான் இப்போது முடியும். தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ்மொழிக்கு சம தகுதி, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு இதற்காக நாம் போராடும் நிலைதான் தற்போது உள்ளது. இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஒரு அரசு அமைய வேண்டும்.
எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம். ஒரு காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அதிபராகலாம் என்று அமெரிக்காவில் இருந்த நிலை மாறி இப்போது கருப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா அதிபராகி இருக்கிறார்.
இதே போல இலங்கையிலும் தமிழர்களின் அரசு அமையும் நாள் வெகுதூரம் இல்லை என்கிற நம்பிக்கையை நாம் பெற வேண்டும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதனால் என்னைப் போல் இந்த உலகில் யாரும் மகிழ்ச்சி அடைந்துவிட முடியாது.
அதிபர் ராஜபக்சவை கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும் என்று இங்கு பேசப்பட்ட கருத்தை கருணாநிதி கேட்கவில்லை. இன்னும் அவர் ராஜபக்சவுக்கு மரியாதை தருவதை பார்த்தீர்களா என்று பேசக்கூடும். அப்படி பேசுபவர்கள் அவர்களுடைய மனசாட்சியை எடுத்து வெளியில் வைத்து விட்டுத்தான் சொல்ல வேண்டும். |