சட்டத்திற்குப் புறம்பாக ஆற்று மணலை கடத்தி, எவ்வித அரசு அனுமதியும் இன்றி அயல் நாடுகளுக்கு மணல் ஏற்றுமதி நடக்கிறது என்று அஇஅதிமுக குற்றம் சாற்றியுள்ளது.
இன்று காலை துவங்கிய தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில் நீதித்துறை மானியக் குழு மீதான விவாதம் நடைபெறும் என அவைத் தலைவர் ஆவுடையப்பன் அறிவித்தார்.
அப்போது பேச எழுந்த அஇஅதிமுக உறுப்பினர்கள் மணல் கடத்தல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்துப் பேசிய ஆவுடையப்பன், நீதித்துறை மானியக் குழு மீதான விவாதம் நடப்பதால், மணல் கடத்தல் குறித்து விவாதிக்க நேரம் கிடைக்காது எனக் கூறினார்.
இதனை ஏற்காத அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர். அவர்களுக்கு ஆதரவாக ம.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது.
இதையடுத்து கடலோரக் காவல்படை குறித்து விவாதிக்க வேண்டும் என பா.ம.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். சபாநாயகர் இதற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அவர்களும் அவையில் இருந்து வெளியேறினர்.
சட்டபேரவை வளாகத்தில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. சட்ட பேரவைக் கட்சியின் கொறடா செங்கோட்டையன், மத்திய அரசின் அனுமதி இல்லாமல், திமுக அரசின் உதவியுடன் தமிழகத்தில் இருந்து கப்பல் மூலம் அயல்நாடுகளுக்கு மணல் கடத்தப்படுவதாக குற்றம்சாற்றினார். |