ஈழத்தமிழர் துயர் நீங்கவும், உலகெங்கும் உள்ள தமிழர்களின் வேதனை அகலவும், தமிழ்க் குலத்தைப் பாதுகாக்கவும் விடியல் பூக்கவும் இயற்கைத்தாய் அருள் வழங்கிட இத் தைத் திருநாளில் வேண்டிக்கொள்வோம் என்று தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் : ஏகாதிபத்திய சார்பு நிலை, வகுப்புவாத பயங்கரவாதப் பேரழிவு சக்திகள், நாட்டையும் மக்களையும் நாசப்படுத்தும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் இவற்றைப் பின்பற்றி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டையும் புறந்தள்ளி ஒரு புதிய மாற்றத்தை நிறுவ இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு : நாட்டில் அமைதி, மகிழ்ச்சி, சமாதானம் பெருகி, மத, இன, நல்லிணக்கம் மிளிர்ந்து, தேசிய ஒற்றுமை உணர்வு உயர்ந்து தீவிரவாதம் அழிந்து அனைத்து மக்களின் வாழ்வும் சிறந்து விளங்கிட இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் : வறுமை நீங்கி வளம் பெருகவும், இருள் நீங்கி ஒளிபெறவும், மனித நேயம் மலர்ந்திடவும், வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமைந்திடவும் எனது மனம் நிறைந்த பொங்கல், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ : ஈழத்தமிழர் துயர் நீங்கவும், உலகெங்கும் உள்ள தமிழர்களின் வேதனை அகலவும், தமிழ்க் குலத்தைப் பாதுகாக்கவும் விடியல் பூக்கவும் இயற்கைத்தாய் அருள் வழங்கிட இத்தைத் திருநாளில் வேண்டிக்கொள்வோம். |