திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றியால், பிரதமராக வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தகர்ந்தது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் லதா அதியமானுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், நாம் அனைவரும் மகிழும் அளவுக்கு திருமங்கலத்தில் தேர்தல் பணியாற்றி மாபெரும் வெற்றியை தந்துள்ள அழகிரி அநீதிக்கு அஞ்சா நெஞ்சன். கருணாநிதியை கண்டு அஞ்சும் நெஞ்சன். 1957ஆம் ஆண்டிலிருந்து தி.மு.க தேர்தலில் ஈடுபட்டு பெருவாரியான வாக்குகளை பெற்றும், பெறாமலும் வெற்றியையும் தோல்வியையும் சந்தித்திருக்கிறது. ஆனால், இதுவரை இடைத்தேர்தலில் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வரலாறு இல்லை. இது அழகிரியின் கை வண்ணம், ஸ்டாலினின் செயல் திறன், தி.மு.க.வினரின் உழைப்பு.அ.தி.மு.க.வும் அவர்களோடு புதிதாக கூட்டு சேர்ந்துள்ள கம்யூனிஸ்டு தோழர்களும் சேர்ந்து அழகிரி இந்த வட்டாரத்திலேயே இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் வரை சென்றனர். இப்போதுதான் புரிகிறது எதிர்க்கட்சிகள் தாங்களாகவே தோற்க தயாராக இருக்கிறோம்; அழகிரி இருக்க தேவை இல்லை என்று எண்ணினார்கள் போலும்.இந்த இடைத்தேர்தலில் ஜெயித்து, அகில இந்திய அளவில் உருவாக இருக்கும் மூன்றாவது அணிக்கு முக்கியத்துவம் ஏற்படுத்துவேன்; அடுத்து வரும் மக்களவை தேர்தலில் ஜெயித்து என்னை பிரதமர் ஆக்க இருக்கிறார்கள்; எனவே விட்டுக்கொடு என்று வைகோவிடம் கேட்டு ஜெயலலிதா திருமங்கலத்தை பெற்றார். |