தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை தகவல் தொழில்நுட்பத் துறையில் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அரசு நிலங்களை ஒதுக்குவது, அந்நிறுவனங்கள் மூலம் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவரங்கள் பற்றி சட்டப் பேரவையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இதுவரை 13 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அவற்றில் ஆறு நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டன. ஆறு நிறுவனங்களுக்கான கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மோட்டரோலோ நிறுவனத்தில் நேரடியாக 600 பேருக்கும் மறைமுகமாக 1000 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமென்று ஒப்பந்த நேரத்தில் தெரிவித்தார்கள். இதன்படி தற்போது நேரடியாக 600 பேரும், மறைமுகமாக 1000 பேரும் பணி வாய்ப்பு பெற்று பணியாற்றுகிறார்கள்.
டெல் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் நேரடியாக 200 பேருக்கும், மறைமுகமாக 600 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமென்று கூறப்பட்டது. தற்போது நேரடியாக 200 பேரும் மறைமுகமாக 600 பேரும் பணி வாய்ப்பு பெற்று விட்டார்கள்.
சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தத்தின் போது தெரிவித்தவாறு நேரடியாக 300 பேரும், மறைமுகமாக 150 பேரும் பணி வாய்ப்பு பெற்றுவிட்டனர்.
கேபாரோ வாகன உற்பத்தி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நேரடியாக 350 பேரும், மறைமுகமாக 350 பேரும் ஒப்பந்ததில் தெரிவித்தவாறு வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.
சான்மினா - எஸ்.சி.ஐ. கார்பரேஷன் ஆப் யு.எஸ்.ஏ. நிறுவனத்தில் நேரடியாக 475 பேரும், மறைமுகமாக 150 பேரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தில் இரண்டு கட்டங்களிலும் சேர்த்து நேரடியாக 11,324 பேரும், மறைமுகமாக 22,000 பேரும் ஒப்பந்தத்தில் தெரிவித்தவாறே வேலை வாய்ப்பு பெற்று பணியாற்றி வருகிறார்கள்.
|