தமிழகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் ஒதுக்கும் நடவடிக்கைகளில் முறைகேடு எதுவும் இல்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிப் பகுதிக்குள் இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில், ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தமிழக அரசு துணை போவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாற்றியிருந்தார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த அரசைப் பொறுத்தவரையில் எதிலுமே ஒளிவு மறைவற்ற இணக்கமான அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதே தவிர எதிலும் மறைமுக நடவடிக்கை கிடையாது.
டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் ஏதோ 300 ஏக்கர், 400 ஏக்கர் பரப்பளவில் அமைவதல்ல.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப மையமான ராஜீவ் காந்தி சாலை தரமணியில் 25 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ கூட்டுத்துறையிலே டாட்டா ரியாலிட்டி மற்றும் இன்ப்ராட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தோடு இணைந்து 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மற்றொரு நிறுவனமான டி.எல்.எப்., ஏறத்தாழ 27 ஏக்கர் நிலப்பரப்பில்தான் - தகவல் தொழில் நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதுவும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோவுடன் கூட்டுத்துறையிலே செயல்படவுள்ளது.
இந்த இரண்டு இடங்களுமே விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலமல்ல. எந்தவிதமான தனிப்பட்ட ஏழை எளியவர்களுக்கும் சொந்தமாக இருந்து அவர்களை காலி செய்து விட்டு கொடுக்கப்படுவதல்ல.
இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வரவுள்ளன.
நிறுவனங்களிலே பணியாற்றக் கூடியவர்களுக்கும், வெளியிலிருந்து வரக்கூடியவர்களுக்கும் பயன்பட வேண்டுமென்பதற்காக ஒரு சில லட்சம் சதுர அடி பரப்பளவில் மாநாட்டு மையமும், தங்கும் விடுதியும், அடுக்குமாடி குடியிருப்புகளும் அமையும். அந்த ஒரு சில லட்சம் சதுர அடி போக மற்ற இடங்களில் தொழிற்சாலைகள்தான் அமையும்.
இதுபோலவே மற்றொரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் முதலீடு 1,500 கோடி ரூபாய். 40 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அந்த மண்டலம் அமையும்போது பல மென்பொருள் நிறுவனங்கள் அங்கே உருவாகும். அப்போது, நிச்சயமாக 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
55 ஆயிரம் பேர் என்ற அளவிற்கு இல்லாமல், ஐந்தாயிரம் பேருக்கு வேலை கிடைத்தால் கூட அது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நல்லதுதானே!
ஒளிவு மறைவற்ற டெண்டர் முறை!
தி.மு.கழக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒரு சில வாரங்களுக்குள்ளாக முடிவு செய்யப்பட்டு அவசர அவசரமாகப் போடப்படுவதில்லை.
|