சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் அரசு நிலங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலுக்குத் தமிழக அரசு துணைபோவதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.
இதுவரை அறிவிக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றிய விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திண்டிவனம் அருகில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு, பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்றெல்லாம் கருணாநிதி அறிவித்து கொண்டே வருகிறார். இதுவரை அவர் வெளியிட்ட அறிவிப்புகளையெல்லாம் கூட்டிப் பார்த்தால் 10 லட்சம் பேருக்காவது வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்.
அப்போதுதான் முதலீடு, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளுக்கு ஒரு மரியாதை இருக்கும். சென்னையில் 2 புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படவிருப்பதாக அறிவித்து, அதற்காக தரமணியில் நிலம் தரப்பட்டுள்ளது. இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது. சலுகை என்ற பெயரில் இந்த நிலத்தை தனியாருக்கு அரசு தாரை வார்த்து கொடுத்துள்ளது.
ஆனால் தரமணியில் பழைய மகாபலிபுரம் சாலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப காரிடர் (ஐ.டி. காரிடர்) பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்களில் நிரப்பப்படாமல் மூன்றரை லட்சம் சதுரஅடி பரப்பளவு கொண்ட தளங்கள் இன்னும் காலியாகவே கிடக்கிறது.
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் டாடா போன்ற நிறுவனங்கள் காலியாக கிடக்கும் இந்த கட்டிடங்களுக்கு செல்லாமல் தரமணியில் காலியாக கிடக்கும் அரசு நிலத்திற்கு ஏன் குறிவைக்கிறார்கள்?
|